இலங்கை தமிழர்களுக்கான உதவி திட்டங்கள் தொடரும் – இந்தியா

295 0

இலங்கை தமிழர்களுக்கான உதவி திட்டங்கள் தொடரும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜ், அண்ணா திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர் வேணுகோபாலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்து செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட பல்வேறு இனம், மொழி, மத ரீதியிலான மக்களின் பன்மைத் துவத்தை பாதுகாக்க இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு வழங்கி வருகிறது.

இது தொடர்பாக இருநாடுகளும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றன.

அந்த பேச்சுவார்த்தைகளின்போது இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அளித்துள்ள வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என இந்திய தரப்பில் வலியுறுத்தி வருவதாகவும் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, இலங்கையில் போர் நிறைவடைந்ததில் இருந்து அங்குள்ள தமிழர்களின் நலனில் இந்திய அரசு முக்கிய கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ள அவர், இலங்கை வாழ் தமிழர்களுக்கு வீடுகலை கொடுத்தல், கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு உதவி திட்டங்களை செயல்படுத்திவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் உள்ள இடம்பெயர்ந்த தமிழர்களுக்கான அந்த உதவி திட்டங்கள் பாரிய அளவில் தொடர்ந்தும் செயல்படுத்தப்படும் எனவும் சுஷ்மா சுவராஜின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.