சீன நீர்மூழ்கிக் கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை என்று வெளியான தகவல் குறித்து சீனா இதுவரை கருத்து எதனையும் வெளியிடவில்லை.
எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் தமது நீர்மூழ்கிக்கப்பல் இலங்கையில் நங்கூரமிட சீனா விடுத்த வேண்டுகோளை, இலங்கை நிராகரித்தது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சீன வெளியுறவு பேச்சாளர் கெங் சுனாங், சீனாவின் பாதுகாப்பு அமைச்சுடன் பேசியதன் பின்னர் பதில் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இந்தியா தெரிவிக்கின்ற நிலையில், வளைகுடா பகுதியில் கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதற்காகவே தமது நீர்மூழ்கிக்கப்பல்கள் அந்த சமுத்திர பகுதிக்கு செல்கின்றதாக சீனா குறிப்பிட்டு வருகிறது.
இந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் நோக்கிலேயே அவை கொழும்பு துறைமுகத்துக்கு செல்லவேண்டியுள்ளன என்றும் சீனா விளக்கமளித்துள்ளது.
இதேவேளை, 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்திய எதிர்ப்பின் காரணமாக இலங்கையில் நங்கூரமிட அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

