இறக்குமதி பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களுக்கு தரக்கட்டுப்பாடு விதி

234 0

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களுக்காக தரக்கட்டுப்பாடு விதிமுறை ஒன்றை அமுல்படுத்துமாறு இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பான, அறிக்கையொன்றை விடுத்துள்ள அந்த அமைப்பின் தலைவர் ரஞ்சித் பிரிஸ், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களில் நச்சு ரசாயன அணுக்கள் அடங்கியுள்ளதாக சூழல் துறை நிபுணர்கள் சிலர் அண்மையில் மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலம் அறியவந்துள்ளதாக தெரிவித்தார்.

இதன் காரணமாக புற்று நோய் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது, இலங்கைக்கு பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களை இறக்குமதி செய்யும் போது எந்தவொரு தரக்கட்டுப்பாடு விதிமுறைகளும் அமுல்படுத்தப்படாத காரணத்தினால் தரம் குறைந்த விளையாட்டு பொருட்கள் தடையின்றி நாட்டுக்குள் பிரவேசித்து வருகின்றதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ள அந்த அமைப்பு, பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் இறக்குமதி தொடர்பாக தரக்கட்டுப்பாட்டு விதிமுறை ஒன்றை அமுல்படுத்துமாறு மேலும் தெரிவித்துள்ளது.