நாடு திரும்பினார் மோடி

228 0

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை டில்லி திரும்பினார்.

நேற்று பிற்பகல் கொழும்புக்கு வருகைதந்த அவர், கங்காராம விசாக பூரணை பண்டிகை வலையத்தை அங்குரார்ப்பனம் செய்துவைத்தார்.

பின்னர், நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து, பண்டாரநாயக்க ஞபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற சர்வதேச விசாக தின நிகழ்வில் பங்கேற்றார்.

பின்னர், மலையகத்துக்கு விஜயம் செய்த அவர், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் டிக்கோயாவில் நிர்மாணிக்கப்பட்ட கிளங்கன் வைத்திசாலையை திறந்துவைத்தார்.

இதையடுத்து, நோர்வூட் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மலையக மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

இந்திய பிரதமர் ஒருவர் மலையகத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டமை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

மஹாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர் மலையகத்துக்கான விஜயங்களை மேற்கொண்டிருந்தனர்.

எனினும், மலையகத்துக்கு விஜயம் செய்து, மலையக மக்கள் மத்தியில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமராக நரேந்திர மோடி வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

இதேவேளை, மலைகத்திற்கான தமது விஜயத்தின்போது, தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதேவேளை, கண்டி தலதா மாளிகைக்கும் இந்தியப் பிரதமர் மோடி விஜயம் செய்தார்.