நாடளாவிய ரீதியில் 10 இலட்சத்திற்கு மேற்பட்டோர் வரட்சியினால் பாதிப்பு

238 0

நாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 53 குடும்பங்களில் வாழும் 10 இலட்சத்து 24 ஆயிரத்து 566 பேர் கடுமையான வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள பருவ மழை வீழ்ச்சியினால் நாடளாவிய ரீதியில் தொடரும் வரட்சியான சூழல் குறித்து கேள்வி எழுப்பிய போதே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடக பேச்சாளர் பிரதிப் கொடிப்புலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 53 குடும்பங்களை சேர்ந்த 10 இலட்சத்து 24 ஆயிரத்து 566 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.வடக்கு, கிழக்கு,வடமேல் மாகாணங்களிலேயே அதிகளவானோர் குறித்த வரட்சியினால் கடுமையான பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

தற்போது நாட்டில் ஆங்காங்கே மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றாலும் தொடர்ந்தும் வரட்சியான சூழ்நிலையே நீடித்து வருகின்றது. இவ்வாறு கடுமையான வரட்சிக்கு முகங்கொடுத்திருக்கும் மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு அரசாங்கத்தினால் தொடர்ந்தும் குடிநீர் உட்பட அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்கி வருகின்றது.

இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இனிவரும் நாட்களில் தொடர்ந்தும் பிற்பகல் 2 மணிக்கு பின்னரான காலப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் குறித்து மக்கள் மிகுந்த அவதானமாக செயற்படுமாறும் வளிமண்டல திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.