கம்பளை சிறுவன் கடத்தல்: நால்வரும் போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

374 0

கம்பளையைச் சேர்ந்த இரண்டு வயதும் எட்டு மாதங்களுமேயான முஹம்மத் சல்மான் என்ற சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நால்வரும், கண்டி-பல்லேகல போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கம்பளையில் கடந்த 3ஆம் திகதியன்று கடத்தப்பட்ட அந்தச் சிறுவன், கரடியனாற்றிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 06ஆம் திகதி சனிக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டார்.

சந்தேகநபர்கள் நால்வரும், 08ஆம் திகதி திங்கட்கிழமையன்று, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்த நீதவான் எம்.கணேசராஜா, அன்றையதினம் அவர்களை, கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் கட்டளையிட்டார்.

சிறுவன் கடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கு, கம்பளை நீதவான் நீதிமன்றத்துடன் தொடர்புபடுவதால், அந்த நால்வரும், கண்டி- பல்லேகல போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர் என, மட்டக்களப்பு சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கம்பளை சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரையிலும், பெண்கள் இருவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு, கம்பளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய நீதிமன்றங்களின் உத்தரவுகளின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.