உலகிலேயே மிகவும் நீளமான புத்தரின் மணற் சிற்பம், இலங்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சயன நிலையிலுள்ள புத்தரின் மணற் சிற்பமே இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை, நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள தியவன்ன ஓயாவுக்கு அண்மையிலேயே இந்த மணற் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய மணற் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் என்பவரினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த சிற்பத்தை எதிர்வரும் 14ஆம் திகதி வரை, காலை 10 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் பார்வையிடலாம்.
புத்தர் பெருமான் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல்வகை வடிவங்களுள் மிகவும் பிரசித்தமானதொரு நிலையே சயன நிலையிலுள்ள புத்தர் சிற்பமாகும்.
இந்த சிற்ப வகையில், புத்தர் பெருமான் அவரது வலது பக்கமாக சாய்ந்த நிலையில் படுத்திருக்கின்றார். இந்த வடிவிலான புத்த சிற்பம் காந்தாரவின் கிரேக்க – புத்த வடிவங்களின் ஏனைய சாயல்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அதே கால கட்டங்களில் தோன்றியதாக நம்பப்படுகிறது.
இதைப் போன்ற சிற்பங்கள் இலங்கையின் தம்புள்ள குகைக் கோவில் மற்றும் பொலன்னறுவையில் காணப்படக் கூடியதாக உள்ளது. 1977, ஏப்ரல் 15இல் பிறந்த சுதர்சன் பட்நாயக், இந்தியாவை சேர்ந்தவர் அவர், உலகில் நன்கு அறியப்பட்ட மணற் சிற்பக் கலைஞராவார்.
இவர், தனது ஏழு வயதிலிருந்து உருவங்களை மணலில் செய்வதற்கு ஆரம்பித்தார். இவர், நூற்றுக்கும் மேற்பட்ட மணல் சிற்பங்களை வடிவமைத்திருக்கிறார் என்பதுடன், தனது படைப்பாற்றல் திறமைகளுக்காக பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளார். சுதர்சன் பட்நாயக், பல உலக சாதனைகளைத் தன் பெயரில் கொண்டவராக இருக்கிறார்.

