அமைச்சரவையின் இணைப் பேச்சாளராக, அமைச்சர் ராஜித சேனாரத்ன இருக்கும் போதே, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பாக, மற்றுமொரு இணைப் பேச்சாளர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
தற்போதுள்ள அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவை நீக்குவதை விட, கட்சி சார்பான முன்மொழிவுகளை அமைச்சரவையில் முன்வைப்பதற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரை, இணைப் பேச்சாளராக நியமிப்பது சாத்தியமானது என்று அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (09) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதில் எந்தவொரு மாற்றமும் கிடையாது. ஆனால், அமைச்சரவை முடிவுகளுக்கான கலந்துரையாடல்களின் போது, பல்வேறு கட்சிகள் சார்பாகக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது பிரச்சினைகள் எழுகின்றன.
“உண்மையில், அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பில் ஊடகச் சந்திப்பொன்றை வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களை, அச்சிட்டு, அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அனுப்பி வைத்தாலே போதுமானது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் போது, ஊடகவியலாளர்களால் எழுப்பப்படும் கேள்விக்கு பதிலளிப்பதே, தற்போதுள்ள பிரச்சினையாகும்.
“ஸ்ரீ லங்கா சுந்திரக்கட்சியின் சார்பாக நியமிக்கப்படவுள்ள இணைப் பேச்சாளரது பெயரானது தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு நியமிக்கப்படுபவர், ஊடகவியலாளர்களால் சுதந்திரக் கட்சி சம்பந்தமாக, கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதிலளிப்பார்” என்று, இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்னவை, குறித்த பதவியிலிருந்து நீக்குமாறு, அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்திருந்தமை தொடர்பான பிரச்சினை, ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் (08) இரவு இடம்பெற்ற கூட்டத்தின் போது, சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டதாகவும், பொதுச் செயலாளர் இதன்போது கூறினார். இந்தப் பிரச்சினை தொடர்பாக, ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேன கவலையடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

