அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்

450 0

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகாரி கையெழுத்திட்டு பட்டம் வழங்குவதால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் வரும் 19-ந் தேதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவை ஒத்திவைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா 19-ந் தேதி பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான வித்யாசாகர் ராவ் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. துணைவேந்தர் நியமிக்கப்படாத நிலையில் அவருக்கு பதிலாக பட்டச் சான்றிதழ்களில் உயர்கல்வித்துறை செயலாளர் கையெழுத்திடுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் பட்டம் செல்லத்தக்கது என்பதற்கான அடையாளமே துணைவேந்தரின் கையொப்பம் தான்.

துணைவேந்தரின் கையெழுத்தில்லாமல் பட்டங்கள் வழங்கப்படும் பட்சத்தில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்க மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது அவர்களின் பட்டங்கள் செல்லாது என அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது. அதனால் அவர்களின் பட்டங்களில் துணைவேந்தர் கையெழுத்து இடம் பெற வேண்டியது அவசியம். அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் உட்பட 2 லட்சம் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.

இத்தனை சிக்கல்களுக்கும் அடிப்படை காரணம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஓராண்டுக்கும் மேலாக துணைவேந்தர் நியமிக்கப்படாதது தான். ஒருவேளை துணைவேந்தரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டால், 2011-ம் ஆண்டில் திருத்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழக விதிப்படி, மூத்த பேராசிரியர் ஒருவரை தற்காலிக துணைவேந்தராக நியமித்து பட்டச்சான்றிதழ்களில் அவரை கையெழுத்திடச் செய்யலாம். மாறாக, அதிகாரியின் பெயரால் பட்டம் வழங்கத் துடிப்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

அண்ணா பல்கலைக்கழகச் சிக்கல் இப்படி இருந்தால், சென்னை பல்கலைக்கழகத்தின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி 17 மாதங்களாக காலியாக உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்திற்கு இன்று வரை புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. இதனால் அங்கு பயின்ற ஒன்றரை லட்சம் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவில்லை.

தற்போது அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகாரி கையெழுத்திட்டு பட்டம் வழங்குவதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் வரும் 19-ந் தேதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவை ஒத்திவைக்க வேண்டும். அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களுக்கு உடனடியாக துணைவேந்தர்களை நியமித்து, அவர்கள் கையெழுத்துடன் பட்டங்களை வழங்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.