கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டெல்லியில் விவசாயிகளை திரட்டி பிரதமர் அலுவலகம் முற்றுகை

348 0

வருகிற 15-ந்தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டெல்லியில் 10 லட்சம் விவசாயிகளை திரட்டி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று திருச்சியில் அய்யாக்கண்ணு கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 41 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

எலிக்கறி, பாம்புக்கறி உண்ணுதல், மரத்தில் மீது ஏறி தற்கொலை முயற்சி, தாடி, மீசையை மழித்தல், மொட்டையடித்தல், வைக்கோல், புல் உண்ணுதல், தாலி அறுத்தல், சேலை கட்டுதல் உள்பட தினமும் ஒரு நூதன போராட்டத்தை நடத்தி டெல்லியையே அதிர வைத்தனர்.

அவர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இறுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றித்தரப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

இதையடுத்து தமிழகம் திரும்பிய விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் விவசாயிகளை திரட்டி டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

இந்தநிலையில் இதுவரை மத்திய அரசு தங்கள் கோரிக்கைகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எனவே போராட்டத்தை தொடர்வது குறித்தும் திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தில்லைநகர் அண்ணாமலை நகரில் உள்ள அலுவலகத்தில் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது.

மாநில நிர்வாகிகள் கிட்டப்பா ரெட்டி, கிருஷ்ணன், முருகேசன், பழனிவேல், முருகன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அய்யாக்கண்ணு நிரு பர்களுக்கு பேட்டியளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும், அனைத்து வங்கிகளிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், தேசிய தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து டெல்லியில் 41 நாட்கள் போராட்டம் நடத்தினோம்.

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர். அறிவித்தபடி வருகிற 15-ந்தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 10 லட்சம் விவசாயிகளை திரட்டி டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தவும், பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள விவசாய சங்க தலைவர்கள் அனைவரும் வருகிற 21-ந்தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் கூடி அகில இந்திய விவசாய போராட்ட குழு அமைக்கப்படும். டெல்லி செல்வதற்கு முன்பு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்துவோம். தமிழகத்தில் வங்கிகளில் விவசாயிகளின் நகைகளை ஏலம் விடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கலெக்டர் அலுவலகங்கள், தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.