கெஜ்ரிவால் மீதான குற்றச்சாட்டு வேதனை அளிக்கிறது – அன்னா ஹசாரே வருத்தம்

227 0

 

சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பை ஏற்படுத்தி ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தி வந்தார்.

அவருடன் இணைந்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் சில காலம் போராட்டங்களில் கலந்து கொண்டார்.

தற்போது கெஜ்ரிவால் தனது மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் சத்யேந்திர ஜெயினிடம் இருந்து ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக, அங்கு மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா நேற்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இது குறித்து தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்னா ஹசாரே மிகுந்த வருத்தம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ‘40 ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான அமைப்பில் ஒரு அங்கத்தினராக நான் இருந்து வருகிறேன்.

என்னுடன் கெஜ்ரிவாலும் இணைந்தார். நாங்கள் இணைந்து மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றோம்.

டெல்லியில் தலைவிரித்தாடிய ஊழலுக்கு எதிரான கெஜ்ரிவாலின் பிரசாரமே, அங்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் இன்று அவரே லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.

இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது’ என்றார்.

இந்த விவகாரம் குறித்து ஆழமாக படித்த பிறகு விரிவான அறிக்கை வெளியிடுவேன் என்று கூறிய அன்னா ஹசாரே, ஆனாலும் தற்போது ஊடகங்களில் வெளியான செய்திகள் தனக்கு வேதனை அளித்ததாகவும் தெரிவித்தார்.