முசலி காணிகள் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை

266 0

முசலி பிரதேசத்தில் வனபரிபாலனத் திணைக்களத்திற்கு உரிய காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று மாத்திரமே தாம் பணிப்புரை வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முசலியில் முஸ்லிம் மக்களுக்கு உரிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் ஜனாதிபதியினால் வனப்பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பாக விசேட குழு ஒன்று இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தது.

இந்த கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

தான் விடுத்த பணிப்புரை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, மக்கள் வாழும் பகுதிகளை அவ்வாறு வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு தான் உத்தரவிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முசலிப் பிரதேசம் வனப்பாதுகாப்பு பிதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி கண்டறிவதற்கு மூவர் கொண்ட குழு ஒன்றை நியமிப்பதற்கு தான் ஏற்கனவே ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வர்த்தமானியில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படும் தவறுகளை திருத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

2012 ஆம் ஆண்டு முசலிப் பிரதேச காணிகள் வர்த்தமானி ஒன்றின் மூலம் வனப்பாதுகாப்புப் பிரதேசத்திற்குள் உள்ளடக்கப்பட்டது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜனாதிபதி கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.