கொக்கிளாயில் தமிழ் மீனவர்களின் வாழ்வுடைமையை தட்டிப்பறித்து தாரைவார்க்க கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் துணை – ரவிகரன்

241 0

கொக்கிளாயில் தமிழ் மீனவர்களின் வாழ்வுடைமையை தட்டிப்பறித்து தாரைவார்க்க கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் துணையாக உள்ளதை கவனிக்கமுடிகின்றது என வடமாகாணசபையின் உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வடக்குக்கிழக்கிணைந்த தமிழர் தாயகப்பிரதேசத்தின் இதயபூமியே கொக்கிளாய். ஈழத்தமிழினத்தின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்த இப்பாரம்பரிய தமிழூரின் வாழ்வுடைமையானது விவசாயமும் பாரம்பரிய மீன்பிடியும் ஆகும்.

கொக்கிளாய் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் பத்து கரவலைப்பாடுகள் இருப்பதை 1985-02-21ஆம் நாளைய அரசிதழ் (வர்த்தமானி) அறிவித்தது. இக்கரவலைப்பாடுகளில் ஒருபாடு மட்டும் சிங்கள மீனவருக்குரியதாக இருந்தது. ஏனைய ஒன்பது கரவலைப்பாடுகளும் தமிழ் கரவலை உரிமையாளர்களுக்கே சொந்தமாக இருந்தது.

1984 ஆம் ஆண்டு நாயாற்றுக்கு தெற்கேயான கிராமங்கள் அரசாங்கத்தின் வெளிப்படையான அறிவித்தல் மூலம் வெளியேற்றப்பட்டன. இதன்போது கொக்கிளாய் ஊர்மக்களும் வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு மக்களற்ற வெற்று இடமாகக்காணப்பட்ட கொக்கிளாய் பிரதேசத்தில் சிங்களக்கரவலை உரிமையாளர்கள் இராணுவத்தினதும் கடற்றொழில் நீரியல் வளத்துறைத்திணைக்களத்தின் இசைவுடனும் தமிழருக்கு சொந்தமான கரவலைப்பாடுகளில் கரவலைத்தொழிலில் ஈடுபட்டனர். இவர்கள் திருகோணமலை மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத்திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக நிர்வகிக்கப்பட்டனர்.

இவ்வாறு மக்களற்ற வெற்றிட்டமாக காணப்பட்ட கொக்கிளாயில் கரவலை நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிங்கள கரவலை உரிமையாளர்கள் படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் தமிழ் மீனவர்களால் இறங்கு துறையாக பயன்படுத்தப்பட்டுவந்த இடத்திலும் அத்துமீறிய கரவலை வளைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

2010 இல் தமிழ் மக்கள் கொக்கிளாயில் மீள்குடியேற்றப்பட்டனர். இந்நிலையில் இங்கு மீள்குடியேறிய தமிழ் மீனவர்கள் தங்கள் மீன்பிடி நடவடிக்கைக்காக தங்கள் பாரம்பரிய இறங்குதுறையை பயன்படுத்த முயன்றபோது இவ் இறங்குதுறையில் கடற்றொழில் நீரியல்வளத்துறைத்திணைக்களத்தின் இசைவுடன் அத்துமீறி கரவலையை வளைத்து வந்த றுக்மல் திசார லிசோரா என்ற சிங்களவன் இம்மக்களை அச்சுறுத்தி துரத்தியதால் இம்மக்கள் தங்கள் வாழ்வுடைமையை இழந்து தமது அன்றாட உணவிற்கு தவிக்கின்றனர்.

இதனை கவனித்த கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் தமிழ் மக்களின் பாரம்பரிய இறங்குதுறைப்பிரதேசத்தை உத்தியோகபூர்வமாக மீன்பிடி இறங்குதுறையாக அறிவித்து கடிதம் ஒன்றை இத்தமிழ் மீனவர்களுக்கு வழங்கி இருந்தார்.
இதனால் தமிழ் மீனவர்களால் தமது வாழ்வுடைமைத்தொழிலை தொடர முடிந்தது. இதனைப்பொறுத்துக் கொள்ளமுடியாத றுக்மல் திசாரா லிசேரா என்பவர் கடற்றொழில் நீரியல் வளத்துறைத்திணைக்களத்தில் முறையிட்டார்.

கடற்றொழில் நீரியல் வளத்துறைத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், றுக்மல் திசார லிசேராவின் இரத்த உறவினர் என கொக்கிளாய் மக்கள்; என்னிடம் தெரிவித்துள்ளனர். இதனால் கடற்றொழில் நீரியல் வளத்துறைத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் பணிப்பின்படி தமிழ் மீனவர்களுக்கு எதிராக நீதிமன்றில் திணைக்களத்தால் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கின் அடிப்படையில் கொக்கிளாயில் உள்ள பத்துப்பாடுகளையும் அளவிடுவதற்காக நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் கடந்த 18.04.2017இல் நிலளவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நடவடிக்கைகளின்போது இக்கரவலைப்பாடுகளின் முன்னை நாள் உரிமையாளர்களான தமிழ் மக்கள் தமது பாடுகள் அமைந்திருந்த இடங்களை அடையாளம் காட்டினார்கள். கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பணியாளர்கள், கிராம அலுவலர்கள் ஆகியோரும் இவ்விடங்கள் என்பதை உறுதிப்படுத்தினார்கள்.
இருந்தபோதும் நீரியல் வளத்துறைத்திணைக்களம் இதனை கருத்தில் கொள்ளவில்லை. தமிழ் மக்களின் இறங்குதுறை அமைந்துள்ள இடம் உள்ளடங்கலான இடத்தையே கரவலைப்பாடுகள் அமைந்துள்ள இடமென என ஒரு தலைப்பட்சமாக சாதித்தனர்.

இந்த நியாயமற்ற செயலினால் தமிழ் மீனவர்களின் வாழ்வுடைமையிலும் அவர்களது குடும்பத்தின் அன்றாட உணவு, அவர்களது பிள்ளைகளின் கல்வியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்மீனவர்களின் இறங்குதுறையை பறித்து சிங்களமீனவர்க்கு கொடுக்க முனைகின்ற இத்திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு நல்லாட்சி அரசு ஒப்புதலளித்திருப்பது மிகவும் கவலை தருவதாக அமைகின்றது. தமிழ் மக்களின் பாரம்பரிய இறங்குதுறை தமிழ் மக்களிடம் கையளிக்கப்படாவிட்டால் இது தொடர்பாக அந்த மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என எண்ணுவதாக ரவிகரன் தெரிவித்தார்.