உயர் நீதிமன்றமானது நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் செயற்படவேண்டும்

225 0

உயர் நீதிமன்றமானது நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் செயற்படவேண்டும். குறிப்பாக வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயர் நீதிமன்றம் அமைக்கப்படுவது அவசியமாகும் என்று சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் மொனிகா பின்டோ பரிந்துரை செய்துள்ளார்.

சாட்சி பாதுகாப்பு மற்றும் பாதிக்கப்பட்டோர் தொடர்பான பொறிமுறை உடனடியாக மீளாய்வு செய்யப்படவேண்டும். அர்த்தமுள்ள பாதுகாப்பு இதில் இடம்பெற வேண்டியது அவசியம்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருக்கும் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பரந்துபட்ட நடவடிக்கைள் அவசியமாகும் என்றும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.

2015ம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் மிகவும் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நிலைமாறுகால நீதிப்பொறிமுறை சுயாதீனமாகவும், பக்கச்சார்பின்றியும் நம்பகரமானதாகவும் அமையவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து சந்திப்புக்களை முன்னெடுத்திருந்த மொனிகா பின்டோ ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 35வது கூட்டத் தொடருக்கு இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் மொனிகா பின்டோ இலங்கை தொடர்பான தனது அறிக்கையில் மேலும் முன்வைத்துள்ள முக்கிய பரிந்துரைகள் வருமாறு

இலங்கையானது தற்போதைய நிலைமையில் மிகவும் தீர்க்கமான கட்டத்தில் இருக்கின்றது. 25 வருடகால யுத்தம் 2009ம் ஆண்டு நிறைவடைந்த பின்னரும் இன்னும் பல்வேறு விடயங்கள் நிலுவையிலேயே உள்ளன. அதன் காயங்களை நீதித்துறையானது ஆராயவேண்டியுள்ளது.

நீதித்துறை நிர்வாகமானது பொதுவான நோக்கில் வெ ளிப்படைத்தன்மையாகவும் ஜனநாயகமாகவும் இருக்கவேண்டியது அவசியம். சர்வதேச மனித உரிமை சாசனங்கள் தொடர்பாக அதிகாரிகளினால் திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.

ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களின் முடிவுகளை அமுல்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். சிவில் கலாசாரம் பொருளாதாரம் மற்றும் அரசியல் சமூக உரிமைகள் உறுதிபடுத்தப்படும் வகையில் அரசியலமைப்பின் அடிப்படை உரிமை குறித்த விடயதானங்கள் மீளாய்வு செய்யப்படவேண்டும்.

இசை சர்வதேச மனித உரிமை கடமைப்பாடுகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும். நீதித்துறை மற்றும் நீதிமன்ற துறைகளின் சுயாதீனம் உறுதிபடுத்தப்படும் வகையில் அதிகார வேறுபாடுகளுக்கான விதிமுறைகள் அரசியலமைப்பில் தெளிவாக அங்கீகரிக்கப்படவேண்டும்.

அரசியலமைப்பு பேரவையின் கட்டமைப்பானது மேலும் செயற்பாட்டு அரசியல்வாதிகள் சிவில் சமூக சட்டத்தரணிகள் சங்க மற்றும் கல்வித்துறை பிரதிநிதிகள் ஆகியோரினால் இடம்பெற வேண்டும்.

நீதிபதிகள் தெரிவானது எப்போதும் வெ ளிப்படைத்தன்மையுடையதாகவும் விதிமுறைகளை பின்பற்றியதாகவும் அமைய வேண்டும்.

நீதிசேவை ஆணைக்குழுவின் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட வேண்டும். பதவி உயர்வுகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும்.நீதிமன்றங்களுக்கு காணப்படும் வளங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நீதிமன்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும்.

எந்தவொரு குற்றப்பிரேரணை விடயமும் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டத்திற்கு அமைவாக நிறைவேற்றப்படவேண்டும்.சட்டமா அதிபர் நியமனமானது வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். அவருடைய அலுவலகமானது சுயாதீனமாக இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

குற்றம் ஒன்றை விசாரிக்கும்போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள், மற்றும் பெண்களின் உரிமைகள் தொடர்பாக சட்டமா அதிபர் தெளிவான மற்றும் முறையான வழிகாட்டியை வெளியிடவேண்டும்.உயர் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு முன்பாக விசாரணைகளை சட்டமா அதிபர் திணைக்களம் கண்காணிக்க வேண்டும்.விசாரணைகள் தாமதம் ஆகின்றமையை குறைப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பணிகள் பரவலாக்கப்பட வேண்டும்.

தகுதியான மற்றும் உயர் தரமுடைய மொழிபெயர்ப்பு, மற்றும் உரைபெயர்ப்பு வசதிகள் அனைத்து நீதிமன்றங்களுக்கும் அனைத்து நடவடிக்கைகளின்போதும் வழங்கப்படுதல் அவசியமாகும்.

பொலிஸ் படையும், மொழிபெயர்ப்பையும் உரைபெயரப்பையும் பெற்றுக்கொள்ளுதல்வேண்டும். அனைத்து சட்டத்துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு சட்டம் அவசியம்.சட்டத்தரணிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், அவர்களின் செயற்பாடுகளில் தலையிடுதல் என்பன நிறுத்தப்பட வேண்டும். கைதுசெய்யப்படும் அல்லது தடுத்து வைக்கப்படும் நபர்கள் அவர்களது சட்டத்தரணிகளை நாடும் வகையில் சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்படவேண்டும். அதற்குப் பதிலாக கொண்டு வரப்படும் சட்டமானது சர்வதேச மனித உரிமை சட்டங்களையும் தரங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.உயர் நீதிமன்றமானது நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் செயற்படவேண்டும். குறிப்பாக வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயர் நீதிமன்றம் அமைக்கப்படுவது அவசியமாகும்.

இதன்மூலம் தலைநகருக்கு வெளியே நீதித்துறை தொடர்பான நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும்.சாட்சி பாதுகாப்பு மற்றும் பாதிக்கப்பட்டோர் தொடர்பான பொறிமுறை உடனடியாக மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

அர்த்தமுள்ள பாதுகாப்பு இதில் இடம்பெற வேண்டியது அவசியம்.குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருக்கும் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பரந்துபட்ட நடவடிக்கைள் அவசியமாகும்.இது நிலைமாறுகால நீதிப்பொறிமுறைக்கு மட்டுமல்லாது முழு நீதித்துறைக்கும் உள்ளடங்கப்பட வேண்டும். 2015ம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் மிகவும் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நிலைமாறுகால நீதிப்பொறிமுறை சுயாதீனமாகவும், பக்கச்சார்பின்றியும் நம்பகரமானதாகவும் அமைய வேண்டும்.அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகள் மிகவும் வெளிப்படைத் தன்மையுடனும் அனைத்துத் தரப்பினரையும் பங்குபெற செய்வதாகவும் அமைய வேண்டும்.