நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவிற்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டமை குறித்து இன்றைய தினமும் மகிந்த அணியினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.
இன்று இந்த விடயத்துக்கு பதில் வழங்கிய சட்ட ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க, மகிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்கிய 46 காவற்துறை அதிகாரிகள் நீக்கப்பட்டமையை உறுதிப்படுத்தினார்.
ஆயினும் இது 6 மாதங்களுக்கு ஒருமுறை காவற்துறை மா அதிபரினால் மேற்கொள்ளப்படும் மீளாய்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையே ஒழிய, அரசியல் தலையீடுகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக கூறினார்.
அதேபோன்ற அச்சுறுத்தல் மகிந்த ராஜபக்ஷவுக்கும் இருப்பதாகவும், இதனால் அவருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் சாகல ரத்நாயக்க, தாம் வழங்கிய விளக்கங்களை புரிந்துக் கொள்ளும் நிலை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு இல்லை என்றால் தம்மால் எதுவும் செய்ய முடியாது என்று கூறினார்.
இதேவேளை கடந்த அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கொலம்பியாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றின்போது, அவரது 11 வயது மகனையும் அரசாங்கத்தின் பிரதிநிதியாக கூறி அரசாங்கத்தின் செலவில் அழைத்துச் சென்றதாக வெளிவிவகார அமைச்சர் மங்கல சமரவீர சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் கைச்சாத்திட்ட ஆவணம் ஒன்றையும் அமைச்சர் சபையில் முன்வைத்தார்.
எனினும் தாம் தமது மகனை தனிப்பட்ட செலவிலேயே அழைத்துச் சென்றதாக விமல்வீரவன்ச கூறினார்.

