சசிகலாவிடம் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி

305 0

அன்னிய செலாவணி வழக்கின் குற்றச்சாட்டு பதிவை வீடியோ கான்பரன்சிங் மூலம் சசிகலாவிடம் விசாரிக்க எழும்பூர் பொருளாதார கோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஜெ.ஜெ. டி.வி.க்கு(அப்போதைய ஜெயா டி.வி.யின் பெயர்) வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதாக சசிகலா, அவரது அக்காள் மகன் பாஸ்கரன் மற்றும் ஜெ.ஜெ.டி.வி. நிர்வாகம் மீது குற்றம் சுமத்தி தனித்தனியாக அன்னிய செலாவணி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை எழும்பூர் கோர்ட்டில் மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தாக்கல் செய்தனர். 1996-97-ம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு பல ஆண்டுகளாக விசாரணையின்றி கிடப்பில் போடப்பட்டது.

இந்த வழக்குகள் முதலாவது பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி ஜாகீர்உசேன் முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் குற்றச்சாட்டு பதிவை, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் ‘வீடியோ கான்பரன்சிங்’ முறையில் விசாரிக்க வேண்டும் என்று அவர் சார்பில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அமலாக்கப்பிரிவு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கின் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக, இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜாகீர் உசேன் முன்பு விசாரணைக்கு வந்தது. காலை 10.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்தபோது, வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பாஸ்கரன் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து 11 மணியளவில் அவர் நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் அமலாக்கப் பிரிவு சுமத்தியுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டுகள் குறித்து பாஸ்கரனிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தான் மறுப்பதாக பாஸ்கரன் பதிலளித்தார். இதை நீதிபதி பதிவு செய்து கொண்டார். பின்னர், விசாரணையை 10-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதன்பின்னர், சசிகலாவிடம் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்ய கோரும் மனுவை நீதிபதி விசாரணைக்கு எடுத்தார். அப்போது அமலாக்கப்பிரிவு சார்பில் வக்கீல் தண்டபாணி, சசிகலா தரப்பில் மூத்த வக்கீல் பி.குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, சசிகலாவிடம் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் விசாரணை நடத்த அனுமதித்து உத்தரவிட்டார். அந்த உத்தரவில், ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் எந்த மொழியில் விசாரணை நடத்த வேண்டும்? ‘வீடியோ கான்பரன்சிங்’ விசாரணையில் கேள்வி புரியவில்லை என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்காலத்தில் கூற மாட்டேன் என்பது உள்ளிட்ட உத்தரவாதங்களை அளித்து சசிகலா 2 வாரத்தில் பிரமாண மனுவை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும். அதில், சிறை அதிகாரிகளின் கையெழுத்தும் இடம் பெறவேண்டும். அதன்பின்னர், கர்நாடக மாநில உள்துறை செயலாளர், வீடியோ கான்பரன்சிங் மூலம் சசிகலாவிடம் விசாரணை நடத்த தகுந்த நடவடிக்கை எடுக்க சிறைத்துறை சூப்பிரண்டுக்கு உத்தரவிடவேண்டும்’ என்றும் நீதிபதி கூறியுள்ளார்.