கொடநாடு காவலாளி கொலை-கொள்ளை வழக்கு: கைதான 2 பேர் இன்று கோர்ட்டில் ஆஜர்

237 0

கொடநாடு காவலாளி கொலை-கொள்ளை வழக்கில் கைதான ஜம்சீர் அலி, ஜிதின் ராய் இருவரையும் போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ந் தேதி நடந்த காவலாளி கொலை-கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொள்ளை கும்பல் தாக்கியதில் காயமடைந்த மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் கொடுத்த தகவல் மூலமும், கோத்தகிரி பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேராக்களில் பதிவான வீடியோ காட்சிகள் மூலம் 11 பேர் கொண்ட கும்பல் இதில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.

ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டார். அவரது கூட்டாளியான கோவையை சேர்ந்த சயன், கேரளாவை சேர்ந்த ஹவாலா கும்பல் தலைவன் மனோஜ் மூலம் கூலிப்படையை வரவழைத்து கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது.

போலீஸ் தேடிய கனகராஜ் கடந்த 28-ந் தேதி இரவு சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த விபத்தில் பலியானார். சயன் பாலக்காடு அருகே விபத்தில் சிக்கி கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் ஹவாலா கும்பல் தலைவன் மனோஜ், சந்தோஷ், சதீ‌ஷன், தீபு, உதயகுமார் மற்றும் சங்கனாச்சேரியை சேர்ந்த சாமி என்கிற மனோஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து கோவை ஜெயிலில் அடைத்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடையே ஜம்சீர் அலி, ஜிதின் ராய் ஆகியோர் மோசடி வழக்கில் கைதாகி கேரள ஜெயிலில் இருந்தனர். அவர்களை 3 நாள் காவலில் எடுத்து கோத்தகிரிக்கு அழைத்து வந்தனர். இருவரையும் கொடநாடு எஸ்டேட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு கொள்ளை சம்பவத்தை நடித்துக் காட்டச் சொல்லி அதனை வீடியோவில் பதிவு செய்தனர்.

பின்னர் இருவரிடமும் விடிய, விடிய விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரது வீட்டில் கொள்ளை அடிக்க போகிறோம் என்று தான் எங்களிடம் கூறினார். அவர் கூறிய திட்டத்துக்கு சொகுசு காரை வாடகைக்கு எடுத்து வந்தோம். ஆனால் கொடநாடு எஸ்டேட் அறைக்குள் கனகராஜூம், சயனும் தான் சென்றார்கள். அங்கு என்ன இருந்தது? என்பது பற்றி எங்களுக்கு தெரியாது.

ஆனால் திட்டமிட்டபடி பணம் எதுவும் கிடைக்கவில்லை என கூறி எங்களுக்கு பணத்தை தர வில்லை. கொள்ளைக்கு பயன்படுத்திய காருக்கான வாடகை பணத்தை கூட தராததால் காரை திருப்பிக் கொடுக்க முடியாமல் போனது. அதற்குள் கார் நிறுவன உரிமையாளர் எங்கள் மீது புகார் கொடுத்து விட்டதால் போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இன்று 3-வது நாளாக இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று இருவரையும் கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர்.

இதற்கிடையே நேற்று கைது செய்யப்பட்ட சங்கனாச்சேரியை சேர்ந்த சாமி என்கிற மனோஜிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். சாமியாரான இவர் கோவில்களில் பூஜைகள் செய்து வந்துள்ளார். அப்போது ஹவாலா கும்பலுடன் பழக்கம் கிடைத்துள்ளது.

அப்போது தான் இந்த கொள்ளை திட்டத்தை அறிந்து அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் வந்ததாக கூறி உள்ளார். ஆனால் கொடநாடு பங்களா அறையில் இருந்து என்னென்ன கொள்ளையடிக்கப்பட்டது? என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளார். இவரையும் எஸ்டேட்டுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இன்று இவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

இந்த வழக்கில் குட்டி என்கிற பிஜின் என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கோவையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சயன் உடல் நிலை தேறியதும் அவரை கைது செய்து ஜெயிலில் அடைக்க போலீசார் திட்ட மிட்டுள்ளனர். குட்டி என்ற பிஜினும் பிடிபட்டு விட்டால் இவ்வழக்கு முடிவுக்கு வந்து விடும் என தனிப்படை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.