தமிழகத்தில் 107 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருக்கும்

242 0

அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 107 டிகிரி வெயிலின் தாக்கம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக வேலூர், திருத்தணி, சேலம், தர்மபுரி, கரூர், திருச்சி உள்பட பல இடங்களில் கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசி வருகிறது. வெப்பநிலையும் 100 டிகிரியை தாண்டி காணப்பட்டது.

இரவு நேரங்களில் கூட வெப்பம் குறையாமல் இருந்தது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர். ஒரு சில இடங்களில் மாலை நேரத்தில் லேசான மழை பெய்தாலும் அனல்காற்று வீசுவது தொடர்கிறது.

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரிவெயில் நேற்று தொடங்கியது. இதனால் தமிழகத்தில் நேற்றும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. சென்னையில் நேற்று காலையிலேயே அதிகளவு வெயில் இருந்ததால் கடற்கரையில் நடைபயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக, நேற்று பகலில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் கோடைமழை பெய்வது வழக்கம். எனவே கோடைமழை எப்போது பெய்யும்? வெப்பத்தின் தாக்கம் எப்போது குறையும்? என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்கள், சில கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. நீலகிரி, வால்பாறையிலும் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

பரவலாக வறண்ட வானிலையே காணப்படும். அக்னி நட்சத்திரம் 28-ந்தேதி வரை இருக்கும் காலக்கட்டத்தில் மேற்கு, தென்மேற்கு பகுதிகளில் இருந்து அனல்காற்று வீச வாய்ப்பு உள்ளது. இதனால் இம்மாத இறுதி வரை தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் 107 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருக்கும். சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

நேற்று காலை 8.30 மணி வரை தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

செங்கோட்டை, பேச்சிப்பாறையில் 6 சென்டி மீட்டர், ஆயக்குடி 5 செ.மீ., கொடைக்கானல், சேலம், பேணுக்கொண்டாபுரம், தென்காசியில் 3 செ.மீ., சிவகிரி, குழித்துறையில் 2 செ.மீ., போடிநாயக்கனூர், 1 செ.மீ., அளவு மழை பெய்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.