வருமான வரி அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியிடம் 8 மணி நேரம் விசாரணை

229 0

அதிரடி சோதனையில் சிக்கிய ஆவணங்கள் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், அவருடன் தொடர்புடைய இடங்கள் என மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 7-ந்தேதி அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதார ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

விஜயபாஸ்கர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து, ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க வைக்கப்பட்டிருந்த 400 டோக்கன்கள் சிக்கியதாகவும் கூறப்பட்டது.அவரது அந்தரங்க உதவியாளர் நயினாரின் திருவல்லிக்கேணி வீட்டில் இருந்து ரூ.2.2 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தினர்.அதிரடி சோதனையின்போது சிக்கிய ஆவணங்கள் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிடமும் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து அவர் நேற்று விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன் அளித்தது.

அந்த சம்மனின்பேரில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு (ஆயகர் பவன்) அமைச்சர் விஜயபாஸ்கருடன் ரம்யா நேற்று காலை 8.50 மணிக்கு வந்தார். அவரிடம் 10.30 மணிக்கு அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். விசாரணை மாலை 6.30 மணி வரை 8 மணி நேரம் தொடர்ந்து நடந்தது.

அவரது பெயரில் 72 இடங்களில் உள்ளதாக கூறப்படும் சொத்துகள், தொழில்கள், குவாரிகள், கல்வி நிறுவனங்கள் பற்றி அதிகாரிகள் துருவித்துருவி கேள்விகள் கேட்டு, பதில்களை பதிவு செய்ததாகவும், அந்த பதில்களை ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பெற்ற தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்ததாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மாலை 6.30 மணிக்கு விசாரணை முடிந்தபோது, மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வரவேண்டும் என்று ரம்யாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி அனுப்பினர்.
கடந்த 2 வாரங்களாக வருமான வரித்துறை விசாரணை அடங்கி இருந்த வேளையில், மீண்டும் விசாரணை தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.