பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலை முறியடிக்க நடவடிக்கை: ராணுவ தளபதி தகவல்

249 0

இந்திய எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கவும், அவர்கள் தாக்குதலை முறியடிக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

இந்திய எல்லைப்பகுதியில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் இறந்தனர். மேலும் வீரர்களின் தலையை துண்டித்து உடலையும் அவர்கள் சிதைத்து வெறியாட்டம் நடத்தி உள்ளனர்.

இதுபற்றி அறிந்த ராணுவ தளபதி பிபின் ராவத் உடனடியாக ஸ்ரீநகர் சென்றார். அங்கு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ராணுவ வீரர்களுடனும் அவர் கலந்துரையாடினார். அப்போது, “இந்த நாடே உங்கள் பின்னால் உள்ளது. எனவே எதற்கும் தயங்காமல் பயங்கரவாதிகளை எதிர்த்து போராடுங்கள்” என அவர் ஊக்கம் அளித்தார்.

அதை தொடர்ந்து பிபின் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பாகிஸ்தான் எல்லையில் அந்நாட்டில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் அதிக அளவில் இந்தியாவில் ஊடுருவ தயாராக காத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கோடை காலத்தில் பனி உருகும் போது அந்த வழியாக ஊடுருவ வாய்ப்பு உள்ளது.

எனினும் நமது வீரர்கள் எதற்கும் தயாராக உள்ளனர். பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கவும், அவர்கள் தாக்குதலை முறியடிக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதற்கான திட்டம் வகுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.