அப்துல்கலாம் மணிமண்டப கட்டுமானப்பணிகள் மும்முரம்

255 0

ராமேசுவரத்தில் அப்துல்கலாம் மணிமண்டப கட்டுமானப்பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. பிரதமர் மோடி ஜூலை 27-ந் தேதி இந்த மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் சொந்த ஊர் ராமேசுவரம் ஆகும். அவர் மறைந்த பின்பு, அவரது உடல் ராமேசுவரத்தில் உள்ள பேய்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு மத்திய அரசு சார்பில் ரூ.50 கோடி செலவில் மணிமண்டபமும், அறிவுசார் மையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணியை, கடந்த ஆண்டு மத்திய மந்திரிகள் மனோகர் பாரிக்கர், வெங்கையா நாயுடு ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

அதில் முதல்கட்டமாக, ரூ.15 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது கிரானைட், கம்பிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஐதராபாத், டெல்லி, ஜெய்ப்பூர், அரியானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு பணிகள் மிகவும் வேகமாகவே நடந்து வருகின்றன.


அப்துல்கலாம் நினைவிடத்தில் மணிமண்டப கட்டுமானப்பணிகள் நடந்து வரும் காட்சி

இந்த மணிமண்டபத்தை, பிரதமர் மோடி வருகிற ஜூலை மாதம் 27-ந் தேதி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார்.

இது குறித்து பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அப்துல்கலாமின் மணிமண்டப கட்டுமானப் பணிகளில் பெரும்பாலானவை முடிவடைந்துள்ளன. அப்துல்கலாமின் 2-ஆம் ஆண்டு நினைவு தினம், வருகிற ஜூலை மாதம் 27-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம், பிரதமர் மோடி மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளார்.

இந்த மணிமண்டபத்தில் கலாம் பயன்படுத்திய ஆடைகள், புத்தகங்கள், அவருடைய கண்டு பிடிப்புகளான ராக்கெட், செயற்கை கோள், உள்ளிட்ட பல்வேறு சாதனைப் படைப்புகள் இடம் பெற உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.