நேபாளத்தில் தொடரும் அரசியல் குழப்பம் – கூட்டணிக் கட்சி ஆதரவு வாபஸால் அரசுக்கு நெருக்கடி

227 0

நேபாள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி நீக்கத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கூட்டணியிலிருந்து விலகுவதாக ராஷ்ட்ரீய பிரஜாதந்திரக் கட்சி அறிவித்ததால் அரசுக்குப் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நேபாள உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சுசீலா கார்க்கி கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். அவர் அந்நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நேபாள காவல் துறைத் தலைவரின் பதவி உயர்வு விவகாரம் அந்நாட்டில் சர்ச்சையைக் கிளப்பியது. அது தொடர்பான விசாரணையில் அப்பதவிக்கான தகுதிகள் குறித்து சர்ச்சை எழுந்தது. இது அதிகாரிகள் மற்றும் அரசு வட்டத்தில் அதிருப்தியை எழுப்பியது.

இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி மீது அரசு கடும் விமர்சனங்களை முன்வைத்தது. தலைமை நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தை ஆளும் கூட்டணியைச் சேர்ந்த நேபாளி காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த இரு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அந்நாட்டு அரசியல் சாசனத்தின் கீழ், தலைமை நீதிபதியின் பதவி நீக்கம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டாலே அவர் இடை நீக்கம் செய்யப்பட்டவர் ஆவார்.

பதவி நீக்கத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராஷ்ட்ரீய பிரஜாதந்திரக் கட்சியைச் சேர்ந்தவரும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான கமல் தாப்பா, ஆளும் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது பிரதமர் பிரசண்டா தலைமையிலான அரசுக்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்துள்ள நேபாளி காங்கிரஸ், நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதனை உடனடியாக வாபஸ் பெற்றால் கூட்டணியில் இணைவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.