உலக ஊடக சுதந்திர நாள் இன்று

306 0

ஊடக சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் ‘மனித உரிமைகள் சாசனம்’ பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள கருத்து வெளியிடும் சுதந்திரத்தை நினைவூட்டும் முகமாகவும், ஐக்கிய நாடுகளால் இன்றை தினத்தை உலக ஊடக சுதந்திர நாளாக அறிவித்துள்ளது.

1993ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி மே மாதம் 3ஆம் திகதி வருடாந்தம் உலக ஊடக சுதந்திர தினமாக அனுஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு முன்னோடியாக, ஆபிரிக்கப் ஊடகங்களால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்த நாளிலேயே ‘ஊடக சுதந்திர சாசனம்’ முன்வைக்கப்பட்டது.

இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் பரிந்துரை செய்யப்பட்ட ‘உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை’ என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.

இந்த நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ கிலெர்மோ கானோ உலக ஊடக சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர்.

இவ்விருது கொலம்பியப் ஊடகயாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது.

இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அவரின் கொலையின் பின்னரே ஊடக சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.

இன்றைய நாளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசெயலாளர் அந்தோனியோ குட்டேரசின் அறிவிப்பில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதன் ஊடாக, ஊடக சுதந்திரத்தை மேலோங்கச் செய்து, நீதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாண ஊடக அமையத்தினால், மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த போராட்டம் இடம்பெறுவதுடன், அதற்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.