தெவிநுவர வெளிச்ச வீடு மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும்

210 0

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தெவிநுவர வெளிச்ச வீடு, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணங்கவினால், எதிர்வரும் வியாழக்கிழமை (04) மாலை 3 மணிக்கு, மக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம,  இலங்கைத் துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்க உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்துக்கொள்ளவுள்ளனர். இலங்கைத் துறைமுக அதிகார சபையினால் நடத்தப்படுகின்ற தெவிநுவர வெளிச்ச வீடானது, 1887ஆம் ஆண்டு சிறிமத் ஜேம்ஸ் நிக்கலஸ் டக்லஸினால் நிர்மாணிக்கப்பட்டது.

இவ்வெளிச்ச வீட்டை நிர்மாணிக்கும் பொருட்டு, 30,000 பிரித்தானிய பவுன் செலவிடப்பட்டது. 7 மாடிகளை கொண்ட இவ்வெளிச்ச வீட்டின் உயரம் 49 மீட்டர்களாகும். இங்கு 196 படிகள் உள்ளன. இலங்கையிலுள்ள நான்கு சர்வதேச வெளிச்ச வீடுகளுள் இதுவும் ஒன்றாகும். 2000ஆம் ஆண்டு, இலங்கை துறைமுக அதிகார சபையினால் இவ்வெளிச்சவீடு புணரமைக்கப்பட்டது.

பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் உட்பிரவேச வாயிலில் காணப்பட்ட இக்கட்டான நிலை காரணமாக இவ்வெளிச்ச வீடு மக்கள் பார்வைக்காகத் திறக்கப்படவில்லை. இவ்வனைத்து பிரச்சினைகளையும் உடனடியாக தீர்த்து, தெவிநுவர வெளிச்சவீட்டை திறந்து வைக்குமாறு, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தன்னுடைய அதிகாரிகளுக்குப் பிறப்பித்த உத்தரவுக்கமைவாக இவ்வெளிச்ச வீடு, மக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

இவ் வெளிச்ச வீட்டை அண்மித்த பிரதேசத்தில் விசேட வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை கவரும் வேலைத்திட்டமும் இதனுள்ள உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது –