புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற அனைவரும் கைகோர்க்க வேண்டும்: ரவூப் ஹக்கீம்

197 0

புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கெம்பல் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் இவர் உரையாற்றுகையில்,

நாட்டை கட்டியெழுப்பி முன்னோக்கி கொண்டு செல்ல வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக தேவைப்படுகின்றது.அரச சொத்துக்களை வழங்காது, முதலீடுகளை பெற்றுக்கொள்ள மாற்று வழி இருந்தால் அது தொடர்பிலும் நிச்சயமாக அவதானம் செலுத்த வேண்டும்.

இந்த பயணத்துக்கு நாட்டு மக்களும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். கடந்த அரச காலத்தில் பலர் அரசியல் பலிவாங்களுக்கு உள்ளாக்கப்பட்டமை அனைவரும் அறிந்த ஒரு விடயமே.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாங்கள் உருவாக்கிய நல்லாட்சி அரசில் தான் இவற்றுக்கான நிவாரணங்களும் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு இன்னும் நிறைவேற்றவேண்டிய பல விடயங்கள் நாட்டில் காணப்படுகின்றன. அந்த வகையில், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவது அத்தியாவசியத் தேவையாக காணப்படுகின்றது.

மேலும், அதிகார பகிர்வு, புதிய தேர்தல் முறை போன்ற முக்கிய விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.இந்தக் கடமையை நிறைவேற்ற நாட்டு மக்களும் எம்முடன் கைகோர்த்து செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.