வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தீர்வினை எதிர்பார்த்து நாங்கள் செயற்படுகின்றோம் : செல்வம் அடைக்கலநாதன்

215 0

வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு தீர்வினை எதிர்பார்த்துத் தான் நாங்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் அம்பாறை ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்திலே எங்களுக்கு உரிமை கிடைக்கவில்லை. நாங்கள் அடக்கு முறையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.இதில் இருந்து மக்கள் மீண்டெழுவதற்கு எமக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் ஏங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

கிழக்கு, அம்பாறை மாவட்டம் பலத்த பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டு இருக்கின்றது என்பதனையும் அநியாயம் நடந்து கொண்டு இருக்கின்றது என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ந்து செயற்படாமல் இல்லை.

எமது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சம்பந்தன் தலைமையில் அம்பாறை மாவட்டத்தினை ஒதுக்கமாட்டோம், கைவிடமாட்டோம்.

அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்கின்ற, தீர்த்து வைக்கின்ற ஒரு பொறிமுறை அடங்காத எந்தவித தீர்வுத்திட்டத்தினையும் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளாது என்ற செய்தியினை கூற விரும்புகின்றேன்.

நாங்கள் பெற்றுக் கொண்ட எதிர்கட்சி தலைவர் பதவி, என்னுடைய பதிவிகளெல்லாம் அரசுடன் இணைந்து சரணாகதி அரசியல் நடாத்துவதற்கு தந்த சன்மானமாக பலரும் சித்தரித்துக் கொண்டு இருக்கின்றனர்.

சர்வேத ரீதியாக எமது பிரச்சினை சம்பந்தமாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேசும் போது எமது தலைவர் எமது மக்களின் பிரச்சினைகளை மிகவும் இறுக்கமாகவும், எந்தவித விட்டுக்கொடுப்பின்றி, தமிழ் மக்களுக்கு எதிராக அரசு அரங்கேற்றுகின்ற பிரச்சினைகள் அனைத்தையும் சுட்டிகாட்டி வருவதனை நான் நன்கு அறிவேன்.

வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு தீர்வினை எதிர்பார்த்துத்தான் நாங்கள் செயற்பட்டு கொண்டு இருக்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்ட தமிழர்கள் யாரோடு சேர்ந்து வாழப்போகின்றோம் என்று நினைக்கின்றார்களோ, விரும்புகின்றார்களோ, அவ்வாறான ஒரு தீர்வினை உள்ளடக்கிய தீர்வு திட்டத்தை உறுதிப்படுத்தி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்படும் என்பதில் எவ்விதமான மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை.

மேலும், தீர்வு திட்ட விடயத்திலே அரசு எங்களை ஏமாற்ற நினைக்குமாயின் நாங்கள் அரசில் இருந்து விலகுவோம் என்பதனை இந்த இடத்தில் கூற விரும்புகின்றேன் என செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.