பிளவுபடாத நாட்டுக்குள் அதிகாரம் பகிரப்படும்- ரணில்

206 0

புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயற்குழுவின் தகவல் அறிக்கை, விரைவாகத் தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கையளிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாட்டைப் பிளவுபடுத்தாமல் அதிகாரத்தைப் பகிர்ந்து, ஒற்றுமையைப் பாதுகாத்துக்கொண்டு, இந்நாட்டை முன்னோக்கி நகர்த்துவது எவ்வாறு என்பது தொடர்பில், அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.   முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதசவின் 24ஆவது நினைவு தினம், கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள, அன்னாரது உருவச்சிலைக்கு அருகில், நேற்று இடம்பெற்றது. இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், “‘பிரேமதாசவாகிய என்னால், இந்த நாட்டின் ஜனாதிபதியாக முடிந்தால், இந்த நாட்டின் எந்தவொரு பிரஜையும், அந்த வாய்ப்பைப் பெறலாம்’ என்று, ஒருமுறை, ரணசிங்க பிரேமதாச தெரிவித்திருந்தார். அவரது கூற்றின்படி, சிங்களவர், தமிழர், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர் என்று எவரும், இந்த நாட்டின் ஜனாதிபதியாகும் தகுதியை உடையவர் என்பதையே, அவர் கூறினார்.   நாட்டின் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, சர்வதேசத்தின் உதவி தேவைப்படுகிறது. ஆனால், அதற்குப் பதிலாக அன்று, சர்வதேசத்தைப் பகைத்துக்கொண்டனர்.

நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல, பொருளாதார அபிவிருத்தி, சமூக அபிவிருத்தியைப் போன்றே, அரசியல் தீர்வும் முக்கியத்துவமாகிறது.   தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்று, ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியின் உருவச்சிலைக்கு முன்னால் உறுதிமொழி வழங்குகிறோம். யுத்தத்தால், வடக்கைப் போ​ன்றே, தெற்கிலும் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இருப்பினும், அவற்றை நாம் மறந்து, எதிர்கால இலங்கையைக் கட்டியெழுப்பும் பணியில் இறங்கியுள்ளோம்.

அதற்காக, சர்வதேசமும் எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகிறது.   நாட்டைப் பிரிவுபடுத்தாமல் அதிகாரத்தைப் பகிர்ந்து, ஒற்றுமையைப் பாதுகாத்துக்கொண்டு, இந்நாட்டை முன்னோக்கி நகர்த்துவது எவ்வாறு என்பது தொடர்பில், முதலமைச்சர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். மனித உரிமைகள், தேர்தல் முறைமை, மதச் சுதந்திரம் போன்றன தொடர்பிலும் கலந்துரையாடி வருகின்றோம். நாட்டை ஒற்றுமைப்படுத்தி, இந்நாட்டுக்குள் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு, அனைவரதும் ஒத்துழைப்பு இன்றியமையாதது.   அவரது வீடமைப்பு வேலைத்திட்டத்தை, வடக்கைப் போன்றே மத்திய மலைநாட்டு மக்களுக்குப் பெற்றுக்கொடுத்துவரும் சஜித் பிரேமதாசவுக்கும், இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என, பிரதமர் மேலும் கூறினார்.