புதிய அரசாங்கம் ஒன்றுக்கு பாதை அமைக்கும் மகத்தான மே தினக் கூட்டம் இதுவென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
இந்த அரசாங்கத்திலுள்ளவர்கள் காலிமுகத்திடலை நிரப்பும் அளவுக்கு மக்களை ஒன்று சேர்க்க முடியாது என சவால் விடுத்தனர். நாம் அந்த சவாலை முறியடித்தோம். மாலை நான்கு மணியாகும் போது நாங்கள் திரும்பிச் செல்கின்றோம். சனநெருக்கத்தில் எங்களால் உயிரைவிட முடியாது. எங்களுக்கு திரும்பிச் செல்ல அனுமதி தாருங்கள் என பல பிரதேசங்களிலிருந்து வந்த மக்கள் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூற ஆரம்பித்தனர். காலிமுகத்திடல் அல்ல அதற்கு அப்பாலும் மக்களை அழைத்துவர எங்களால் முடியும்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பல சிரேஷ்ட முக்கிய அமைப்பாளர்களை பதவி நீக்கினர். இவ்வாறான நடவடிக்கை எடுக்க எடுக்க மக்கள் வெள்ளம் எம்முடன் வந்து சேர்கின்றனர். எவரை என்ன செய்தாலும், ஒரு மயிரைக் கூட பிடுங்கி விட அவர்களால் முடியாமல் போனது.
நாம் எமது சவாலை முறியத்தோம். முடியுமானால் தற்பொழுது நீங்கள் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்திக் காட்டுங்கள் என அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம். தேர்தல் என்று கூறும்போதெ இந்த அரசாங்கத்தின் கால்கள் நடுங்க ஆரம்பிக்கின்றன. இந்த சனக் கூட்டத்தைக் கண்டதன் பிறகு அரசாங்கம் தேர்தலை நடாத்தவே மாட்டாது எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

