தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் (காணொளி)

277 0

தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பு, களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழரசுக்கட்சியின் பட்டிருப்புக்கிளையின் ஏற்பாட்டில், பட்டிருப்புகிளையின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா, யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் ஆசியுரையை சிவஸ்ரீ சு.விநாயகமூர்த்தி குருக்கள் வழங்கினார்.

தலைமையுரையை பா.அரியநேத்திரனும், அறிமுகவுரையை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் நிகழ்த்தினர்.

‘ஜெனீவா தீர்மானமும் ஈழத்தமிழர் அரசியலும்;; என்னும் தலைப்பில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நினைவுப் பேருரை ஆற்றினார்

‘தந்தை செல்வா’ என்னும் தலைப்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா உரையாற்றியதுடன், சிறப்புரையினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் நிகழ்த்தினார்.