புதிய தலைமை தேவை!

423 0

விரிந்து செல்கின்ற மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை மகிந்தவின் பெயரை சொல்லாமல் சொல்லி அச்சுறுத்தி, போராட்டங்களை நிறுத்தம் காணச் செய்யும் ஒரு திட்டமிட்ட செயலாகவே மாவையரின் கூற்றைப் பார்க்க வேண்டும்.

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கே முதலிடம் என்பதால் அதற்குத் தேவையான காணிகளை வைத்துக்கொண்டு மிகுதியை மட்டுமே படிப்படியாக விடுவிக்க முடியும் என்ற தங்கள் நிலைப்பாட்டை இராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.

மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் இந்த மாதம் 24ம் திகதி தமது அமைச்சில் நடத்திய மாநாட்டில் இராணுவத் தரப்பினரால் இது தெரிவிக்கப்பட்டது.

கூட்டமைப்பின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் இக்கூட்டத்தில் சமூகம் அளித்திருந்தனர்.

இக்கூட்டத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதே விடயம் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் ஒரு கூட்டம் நடத்தியிருந்தார்.

மக்களின் காணிகளை பலாத்காரமாக படையினரால் வைத்திருக்க முடியாது. அரசாங்கம் உத்தரவிட்டால் அக்காணிகள் விடுவிக்கப்படுமென்று இராணுவத் தளபதி அக்கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இரண்டு வார இடைவெளிக்குள் இராணுவம் தனது நிலைப்பாட்டை எவ்வாறு மாற்றியது?
நல்லாட்சி என்று சொல்லப்படும் மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் ஆகப்பிந்திய குத்துக்கரணங்களில் இதுவுமொன்று.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் ஒவ்வொருவரதும் விபரங்கள் பரிசீலிக்கப்பட்டு தாமதமின்றி முடிவுகள் எட்டப்படுமென்று மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார்.

இது தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் தனித்தனியாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடிதங்கள் எழுதியும் எந்தப் பதிலும் இல்லை.

சுகவீனம் காரணமாக சிறைக்கூட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அரசியல் கைதி ஒருவரை சிறை அதிகாரிகள் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமான தேசிய அமைப்பு அமைச்சர் சுவாமிநாதனிடம் முறையிட்டது. கூட்டமைப்பின் கவனத்துக்கும் இது கொண்டு செல்லப்பட்டது.

ஆனால், இதனையிட்டு எவரும் அக்கறை காட்டவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லெண்ணச் செயற்பாடுகளில் இதுவும் ஒன்று

வன்னி யுத்த முடிவில் கைதான அல்லது சரணடைந்த பின்னர், காணாமல்போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் விரிவடைந்து செல்கிறது. காணாமல் ஆக்கப்பட்ட 115 பேர் தொடர்பான விபரங்களை அவர்களது உறவினர்கள் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் இந்த மாதம் 21ம் திகதி கையளித்தனர்.
இந்தப் பட்டியலை இந்த மாதம் 27ம் திகதி நல்லாட்சி அரசின் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்தினவிடம் கையளிக்கவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கு என்ன நடந்தது என்பது எப்போது தெரிய வருமோ தெரியாது. காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விடயத்தில் நல்லாட்சி அரசு நீதி வழங்கத் தவறின் அரச நிர்வாகங்கள் முடக்கப்படுமெனவும், ஏ-9 வீதியை மறித்து போராட்டம் நடத்தப்படுமென்று அந்த மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனை எழுதும் ஏப்ரல் 27ம் திகதி முழு அடைப்பும் கண்டன ஆர்ப்பாட்டமும் வட தமிழீழத்தில் முழுமையாகவும், தென் தமிழீழத்தில் கணிசமான அளவும் நடத்தப்பட்டது. சில மணிநேரங்கள் ஏ-9 வீதி முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுதான் ஆரம்பம்; இனிமேல்தான் மிகுதி என்று போராட்ட மக்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தமிழீழமெங்கும் வியாபித்துள்ளது.

கிழக்கு மாகாணசபை அலுவலகத்தை அங்குள்ள வேலையற்ற பட்டதாரிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மாகாண அரசு மத்திய அரசின் பக்கம் பந்தை அடிப்பதும், மாறாக மத்திய அரசு மாகாண அரசின் பக்கம் பந்தைத் திருப்பி அடிப்பதாகவும் அரசியல் விளையாட்டு நடைபெறுகிறது.

இந்த விளையாட்டுகளுக்கு நடுவில் ஜெனிவா மறக்கப்பட்டதுபோல் போர்க்குற்ற விசாரணை, பொறுப்புக்கூறல் என்பவை மறைக்கப்பட்டவையாகியுள்ளன. பேச்சளவில் எல்லாம் நடைபெறுவதாகக் கூறப்பட்டாலும், செயற்பாட்டில் வெறும் பூச்சியந்தான்.

அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணிக்கவிருக்கும் இந்தியப் பிரதமர் மோடியை இலங்கைப் பிரதமர் ரணில் டில்லி சென்று இந்த வாரம் சந்தித்தார். ஜெனிவாவில் கடந்த மாதம் வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசத்தை ரணிலுக்கு நினைவூட்டிய மோடி, ஜெனிவாவுக்கு வழங்கிய உறுதிமொழியை இலங்கை நேர்த்தியாக நிறைவேற்றுமென்ற தமது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

ரணில் இதற்கு உத்தரவாதம் வழங்கியதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.
இரு வருட கால அவகாசம் ஜெனிவாவில் வழங்கப்பட்ட விடயத்தில் இந்தியா எதிலுமே கலந்து கொள்ளாது தவிர்த்துக் கொண்டது என்பதை இவ்விடத்தில் நினைவிற் கொள்வது அவசியம்.

இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை வவுனியாவில் சற்று வித்தியாசமான ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. ஷதடுமாறும் தமிழ்த் தலைமைகளால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள். அடுத்தது என்ன?| என்ற தலைப்பில் இக்கூட்டம் அமைந்திருந்தது.

தற்போதைய தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களின் விருப்புகள் மற்றும் அரசியல் அபிலாசைகளை அறிந்து செயற்படும் நிலையில் இல்லை என்ற கருத்து இதில் கலந்து கொண்ட பலராலும் பகிரப்பட்டது.

இலங்கை அரசு தற்போது தயாரித்து வருவது புதிய அரசியலமைப்பா, அல்லது அரசியல் அமைப்பு திருத்தமா என்பது மயக்கமான நிலையில் இருப்பதாகவும், தமிழ் தலைமைகளுக்கே இது தெரியுமான என்பது சந்தேகமே என்பதும் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழ் மக்களுக்கான அரசியல் போக்கு சீரானதாக இல்லையென்பதை தற்போதைய சூழல் எடுத்துக் காட்டுவதாகவும், தமிழர்களுக்கு புதிய தலைமையின் தேவை உணரப்படுவதாகவும் இங்கு பலரும் எடுத்துக் கூறினர்.

இந்தக் கருத்தை கூட்டமைப்பின் முக்கிய பங்காளியான தமிழரசுக் கட்சி நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது என்பது புரிந்து கொள்ளக்கூடியதொன்று. இதனை நிரூபிப்பது போன்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறியுள்ள ஒரு கருத்து ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

“இந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கினால் அநீதி இழைத்தவர்கள் (மகிந்த தரப்பு) மீண்டும் பதவிக்கு வந்து விடுவார்கள் என்பதே தற்பொழுது எங்களுக்கு இருக்கின்ற ஒரு சஞ்சலம்” என்று இவர் கிளிநொச்சியில் வைத்துத் தெரிவித்துள்ளார்.

விரிந்து செல்கின்ற மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை மகிந்தவின் பெயரை சொல்லாமல் சொல்லி அச்சுறுத்தி, போராட்டங்களை நிறுத்தம் காணச் செய்யும் ஒரு திட்டமிட்ட செயலாகவே மாவையரின் கூற்றைப் பார்க்க வேண்டும்.

இந்தப் போராட்டங்கள் மக்களின் பேரெழுச்சியாக மாற்றம் பெறுவதால் தங்களின் எதிர்கால இருப்பு கேள்விக்குறியாவதை மாவையர் புரிந்துள்ளார் என்பது அவரது கூற்றின் வழியாகப் புலனாகின்றது.
வவுனியா கலந்துரையாடலில் தமிழ் தலைமைகள் என்று குறிப்பிட்ட அத்தனை குற்றச்சாட்டுகளும் தங்கள் மீதானதே என்பதை மாவையர் மட்டுமன்றி சம்பந்தரும் சுமந்திரனும் நன்கறிவர்.

அதன் காரணமாகவே மகிந்தவை மையப்படுத்தி, இந்த அரசுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாதென்று போராடிக் கொண்டிருக்கும் மக்களைப் பார்த்து மாவையர் அக்கறையோடு தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கமும் எங்களை ஏமாற்றுமானால் போராட்டம் நடத்தும் மக்களோடு நாமும் இணைந்து போராட நேரிடும் என்று மாவையர் சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்ததை இவ்வேளையில் அவருக்கு நினைவூட்டுவது தவிர்க்க முடியாதுள்ளது.

அரசியல்வாதிகள் எளிதில் எதனையும் மறந்து விடுவதில்லை. ஆனால் மக்களை மறதிக்காரர்கள் என்று நினைத்து தாம் மறந்ததாக நடிப்பது இவர்களுக்குக் கைவந்த கலை. இதில் இவர்கள் மட்டும் எவ்வாறு விதிவிலக்காக முடியும்?

பனங்காட்டான்