இன்றைய தினம் அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டிய ஜனாதிபதி

217 0

கழிவு முகாமைத்துவம் குறித்த சில வர்த்தமானி அறிவிப்புக்களுக்கான ஒப்புதலை பெற்று கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டியுள்ளார்.

குப்பைகளை அகற்றுதல் அத்தியாவசிய சேவையாக அறிவித்து கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதி, விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக எந்தவொரு உள்ளுராட்சி மன்றத்தின் ஊடாக செயல்படுத்தப்படும் குப்பைகளை அகற்றுதல், போக்குவரத்து, தற்காலிகமாக களஞ்சியப்படுத்தல், ஒழுங்கமைத்தல், கொட்டுதலுடன், இது குறித்த செயல்பாடுகள் அத்தியாவசிய சேவையாக பிரகடப்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரணமாக இவ்வாறான வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டதன் பின்னர் 10 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தை கூட்டி அதனை நிறைவேற்ற வேண்டும்.

அந்த வகையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்ட ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.