குற்றச் செயல்களை செய்தவர்களை கோத்தபாய ராஜபக்ச காப்பாற்றியுள்ளார்!

214 0

கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் லசந்த விக்ரமதுங்கவின் கொலை உட்பட பல கொலைகளுக்கு காரணமானவர்களும், கடத்தல்களுக்கு காரணமானவர்களும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதே போன்று கீத் நொயார் தாக்கப்பட்டமை உட்பட ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மேற்கொண்ட நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். பல ஆதாரங்கள் தற்போது எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறான செயல்களைச் செய்தவர்கள் உயர் மட்ட தூண்டுதலின் பேரிலேயே இவற்றினை செய்தனர். இவை அனைத்தையும் செய்தது ஒரு குழுவே. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் யார் மீதும் கொண்ட தனிப்பட்ட விரோதம் காரணமாக இவற்றினை செய்யவில்லை. அதே போன்று இந்தக் குற்றச் செயல்களை செய்தவர்களை கோத்தபாய ராஜபக்ச காப்பாற்றியுள்ளார்.

அதற்காக அவர் எழுதி கையெழுத்திட்ட கடிதங்களும் தற்போது கிடைத்து விட்டன. இவை அனைத்தின் பின்னணியில் உள்ளவர்கள் ராஜபக்சர்களே. இது வரையில் இழுபறியாக இருந்த வழக்குகள் கூடிய விரைவில் முடிவுக்கு வரும்.

இந்த காலகட்டமானது கொலைகாரர்களும், திருடர்களும் வெளிச்சத்திற்கு வரும் காலமாகும். எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு மாற்றங்களை அரசு ஏற்படுத்தும்.இந்த வருட இறுதிக்குள் அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவார்கள். அதன் காரணமாகவே இப்போது ஆட்சியைக் கவிழ்க்க ராஜபக்சர்கள் தீவிரமாக திட்டம் தீட்டிக்கொண்டு வருகின்றனர்.

இதற்கு காரணம் தாங்கள் செய்த கொலைகளையும், ஊழல் திருட்டுகளையும் மறைத்துக் கொள்வதற்காகவே. ஆனால் இனிமேலும் அவை நடக்காது.அதேபோன்று சர்வதேச வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் தற்போது விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.