இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறப்பு

234 0

2017 ஆம் கல்வியாண்டின் இரண்டாம் தவணைக்காக அரச மற்றும் அரச அனுமதி பெற்றுள்ள தனியார் பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. எனவே பாடசாலையையும் சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைத்திருப்பதற்கு பாடசாலை அதிபர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும் என கல்வி அமைச்சு சகல அதிபர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் தற்போது நுளம்புகளினால் ஏற்படும் நோய்கள் அதிகரித்து வருகின்றன. எனவே 2017 ஆம் கல்வியாண்டின் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கும்போது நுளம்புகள் பெருகுவதனை தடுத்து மாணவர்களின் சுகாதாரத்தை உறுதிசெய்யும் வகையில் பாடசாலையைும் சுற்றுப்புறச் சூழலையும் உறுதிசெய்ய வேண்டும்.

மேலும் குறித்த பணியில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம், உள்ளூராட்சி மன்ற அமைப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர்களின் ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் நாட்டில் தற்போது அதிகளவான வெப்பம் நிலவுகிறது. மாணவர்களை உஷ்ணத்திலிருந்து பாதுகாப்பதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்த வேண்டும். ஆகவே மாணவர்களை வெளிக்களச் செயற்பாடுகளில் ஈடுபடுவதைக் குறைப்பதுடன், கூடுதலாக நீர் ஆகாரம் அருந்துவதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும் உஷ்ணத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் குடை மற்றும் பாதுகாப்பு அங்கிகளை பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யுமாறும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.