பெண்கள் பற்றி அவதூறாக பேசிய விவகாரம்: கேரள மந்திரி ராஜினாமா செய்ய மாட்டார்- பினராயி விஜயன்

278 0

பெண்கள் பற்றி அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக கேரள மந்திரி ராஜினாமா செய்ய மாட்டார் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மாநில மின்துறை மந்திரி மணி, கோரிக்கைக்காக போராட்டம் நடத்தும் பெண்கள் பற்றி ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக தெரிகிறது. மேலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பிரச்சினை தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பற்றியும் அவர் கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இதனையடுத்து மந்திரி மணிக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவரை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றது. இந்த பிரச்சினை கேரள சட்டசபையிலும் நேற்று எதிரொலித்தது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்-மந்திரி பினராயி விஜயன், ‘இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த மந்திரி மணி, பேச்சுமொழியில் பேசியுள்ளார். ஆனால் அது ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டு, பெரிதுபடுத்தப்பட்டு உள்ளது. எனவே அவர் ராஜினாமா செய்ய மாட்டார்’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.