கொலன்னாவை, மீதொட்டமுல்ல குப்பை மலை சரிந்தமையால் பலியானவர்களின் எண்ணிக்கை, 33 என ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. எனினும், அந்தக் குப்பை மலைக்குள் சிக்கி சுமார் 200 பேர் பலியாகியிருக்கலாம் என, தான் கருதுவதாக, சமூகவலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
மீதொட்டமுல்லயில் இடம்பெற்றது, மனித படுகொலையாகும். அதனோடு தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களை வழிநடத்திச் சென்றோர் மீது, மனிதப் படுகொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளமை, சமூக வலைத்தளங்களில் வீடியோவாக தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மீதொட்டமுல்லயில் இடம்பெற்றது அனர்த்தம் அல்ல. உண்மையில், அங்கு மனிதப் படுகொலைகளே இடம்பெற்றுள்ளன.
இந்தச் சம்பவத்துடன் நேரடியாக மற்றும் மறைமுகமாக தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவேண்டும். சிறார்கள், சேற்றுடன் சிக்கிப் பலியானதை நாம் கண்டோம். வீடுகளுக்குள் சிக்கியோர், தங்களுடைய அலைபேசிகளின் ஊடாக, காப்பாற்றுமாறு தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
அவ்வாறானவர்களில், மூச்செடுக்கமுடியாமல் விசவாயுவை சுவாசித்து மரணித்தவர்களும் உள்ளனர். வேறு நகரத்தைச் சுத்தப்படுத்துவதற்கு சென்றிருந்த நிலையிலேயே, மீதொட்டமுல்ல மக்கள் பலியாகியுள்ளனர். இதுவொரு சமூகப் படுகொலையாகும். இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

