காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் – அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

252 0

காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப் படும் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் நேற்றையதினம் பாதுகாப்பு தரப்பினருக்கும், தமக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் தமிழ் தேசிய கூட்;டமைப்பைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது தேசிய பாதுகாப்புக்கு அவசியமான காணிகளைத் தவிர, ஏனைய காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், அவ்வாறான காணிகளை அடையாளம் கண்டு கள ஆய்வு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடல் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தொடர்பு கொண்டு கேட்டபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறினார்.

எனினும் சந்திப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட மின்னஞ்சல் ஊடாக புகைப்படத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தனர்.

எவ்வாறாயினும், கடந்த வாரம் பாதுகாப்பு தரப்பினருடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட சிலர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதன்போதும், விடுவிக்கப்படக்கூடிய காணிகள் தொடர்பில் கள ஆய்வு செய்து, கொழும்பில் மீண்டும் சந்திப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழு ஒன்றும், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரச அதிபர் ஆகியோர் இணைந்து, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடுவிக்கப்படாதுள்ள காணிகளை கள ஆய்வு செய்துவந்தமை குறிப்பிடத்தக்கது.