கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள புறநகர்களில் பாரிய ஆபத்து

317 0

கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள புறநகர்களில் பாரிய ஆபத்து ஏற்படவுள்ளதாக பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தப் பகுதியில் முறையற்ற வகையில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக, அந்த பிரதேசங்களில் வீடுகள் மற்றும் அரசாங்க கட்டடங்கள் அழிவடையும் பாரிய ஆபத்துக்கள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாரிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு வலுவான அடித்தளத்திற்காக Pile போடுவதனால் ஏற்படும் அதிர்வு தன்மையே இதற்கு காரணமென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரையில் கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுவான பல வீடுகளின் சுவர்கள் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில பிரதேசங்களில் வீடுகள் தாழ் இறங்கியுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. பல வருடங்களான ஏற்பட்ட இந்த அதிர்வுகளின் காரணமாக இன்றும் சில வருடங்களில் கொழும்பு நகரத்தின் பல இடங்கள் தாழ் இறங்கும் என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கொழும்பு 10, தெமட்டகொட, மாலிகந்த வீதியில் லிப்டன் மகளிர் பாடசாலைக்கு அருகில் நிர்மாணிக்கப்படும் பல மாடி கட்டடங்களுக்கு Pile போடுவதன் காரணமாக ஏற்படுகின்ற அதிர்வுகளில் அந்த பாடசாலையின் இரண்டு மாடி கட்டடம் உட்பட பல கட்டடங்களின் சுவர்கள் முழுவதும் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலைமைக்கு மத்தியில் பாடசாலை நாட்களில் இந்த கட்டடம் இடிந்து விழுந்தால் மீதொட்டமுல்ல அனர்த்தத்தை விடவும் பாரிய ஆபத்து ஒன்று ஏற்பட கூடும் என அந்த கட்டடத்தை ஆய்வு செய்த பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுவர் வெடித்துள்ள பாடசாலை கட்டடம் தொடர்பிலும், அதற்கு அருகில் உள்ள முறைசாரா நிர்மாணிப்புகள் தொடர்பிலும் குறித்த பாடசாலை அதிபர் நகர அபிவிருத்தி அதிகார சபையில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதிபரின் முறைப்பாட்டினை தொடர்ந்து நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், அங்கு கற்கும் மாணவர்களை உடனடியாக வேறு பாடசாலைக்கு மாற்றுமாறு அறிவித்துளன்ளனர்.

ஆபத்தான நிலைமைக்கு மத்தியில் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் மீண்டும் பாடசாலை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் அதிபரின் முறைப்பாடு தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய ஒருவரும் முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் நிறுவனத்தினால் கொழும்பு 7 வோட் ப்லேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாரிய கட்டடத்தின் காரணமாக, இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன வாழ்ந்த வீட்டின் சுவரும் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு இதுவரையிலும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

கொழும்பு எல்லைக்குள் நிர்மாணிக்கப்படும் முறைசாரா கட்டடங்களின் காரணமாக கொழும்பு கோட்டை, கொம்பனி தெரு, மருதானை, குருந்துவத்தை, பொரளை, கொள்ளுப்பிட்டிய, பம்பலப்பிட்டி, கிருளப்பனை, வெள்ளவத்தை, நாரஹென்பிட்ட ஆகிய பிரதேசங்களின் மக்களின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட கூடும் எனவும், அந்த பிரதேசங்களின் சாதார வீடுகள் அழிய கூடும் என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.