தேசிய உணர்வோடு, அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கமும் இணைந்து முதற்தடவையாக நடாத்திய நாட்டியமயில் மற்றும் நெருப்பின் சலங்கை நிகழ்வுகளுக்கான பரதநாட்டியப் போட்டிகளானது 15 மற்றும் 17ம் திகதிகளில் பேர்ண் மாநிலத்தில் மண்டபம் நிறைந்த சுவிஸ் வாழ் தமிழீழ உறவுகளுடன் மிகவும் சிறப்பாகவும், உணர்வெழுச்சியுடனும் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது.
இரு தினங்களிலும் போட்டி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், ஈகைச்சுடரினைத் தொடர்ந்து நடராஜர் மற்றும் நிகழ்வுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம், ஆசியுரைகளுடன் ஆரம்பமாகின.
புலம்பெயர்ந்து வாழும் எமது இளையோர்களின் கலைத்திறமையை ஊக்குவித்து கௌரவிக்கும் முகமாகவும், கலை ஆசிரியர்களின் திறமையை வெளிக்கொணரும் மேடையாகவும் இவ் நாட்டியமயில் போட்டி நிகழ்வுகள் அமைவதோடு தமிழ்த் தேசியத்திற்கு வலுச்சேர்க்கவும், இளைய தலைமுறையினரிடம் தாயகம் சார்ந்த இன உணர்வைப் பேணவும், தாயகம் நோக்கிய தேடலுடன் இளையோர்களை வழிப்படுத்தவும், தாயக உணர்வோடு அவர்களை ஒருமைப்படுத்தும் நோக்கிலும் நெருப்பின் சலங்கை எழுச்சிப்பாடலுக்கான பரதநாட்டியப் போட்டியும் அமைகின்றது.
இவ் நிகழ்வில் பங்குபற்றி சிறப்பித்த பிரதம விருந்தினர்கள், நடுவர்கள், கலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், போட்டியாளர்கள், அணிசெய் கலைஞர்கள், எமது சக அமைப்புக்களின் பொறுப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், கலை ஆர்வலர்கள், தமிழின உணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்க இளம் செயற்பாட்டாளர்கள் அனைவரும் இணைந்து செங்கம்பளம் விரித்த நுழைவாயிலினால் மண்டபத்திற்குள் அழைத்து வரும்போது கைகளைத் தட்டி உற்சாகமளித்த காட்சி நிகழ்வின் மகுடம்.

பல்வேறு பிரிவுகளாக நடாத்தப்பட்ட இப் போட்டி நிகழ்வில் ராதா நடனாலய அதிபர் திருமதி ஞானசுந்தரி வாசன் அவர்களின் மாணவி டர்ஷினி வோல்ரன் அவர்கள் சுவிஸ் தழுவிய நாட்டியமயில் 2017 விருதை தனதாக்கிக் கொண்டதுடன் நர்த்தனா கலைக்கூட அதிபர் திருமதி அனுசா சர்வானந்தன் அவர்களின் மாணவிகள் ஐரோப்பா தழுவிய நெருப்பின் சலங்கை 2017 எனும் விருதோடு ஆயிரம் பிராங்குகள் பணப்பரிசையும் தனதாக்கிக் கொண்டனர். நெருப்பின் சலங்கை போட்டி நிகழ்வில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்ற நடனாலயங்கள் தாங்கள் வெற்றியீட்டிப் பெற்றுக் கொண்ட ஆயிரம் மற்றும் ஐநூறு பிராங்குகளை தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உறவுகளின் மீள்வாழ்வாதாரத்திற்கு மேடையில் வைத்தே வழங்கியமை சிறப்பாகவும் அனைவருக்கும் முன்னுதாரணமாகவும் அமைந்திருந்தது.
நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் நினைவுப்பரிசில்களுடன் சான்றிதழ்களோடு, ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு வெற்றிக்கேடயங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர்கள், சிறப்பு நடுவர்கள், கலை ஆசிரியர்கள், அணிசெய் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் மதிப்பளிக்கப்ட்டனர்
இப்போட்டி நிகழ்வை வெற்றிகரமாக நடாத்த அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய கலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள், இனஉணர்வாளர்கள், அனுசரணையாளர்கள், ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள்; உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளையும் நன்றியன்போடு பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கம்























































