மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுதிப்பதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மாஅதிபரின் உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய குற்றச்சாட்டின் கீழ் இவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் மிக முக்கிய சந்திகளில் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸ் மாஅதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், வவுணதீவு – கன்னங்குடா சந்தியில் சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இடம்பெற்ற பகுதியில் அன்றைய தினம் பொலிஸார் கடமைகளில் இருக்கவில்லை என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்தே வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

