மீதொட்டமுல்ல அனர்த்தம் – மீட்பு பணிகள் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கிறது

256 0
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவை அடுத்த மீட்பு பணிகள் இன்று 7ம் நாளாகவும் தொடர்வதாக, இராணுவப் பேச்சாளர் ரொசான் செனேவிரத்ன தெரிவித்துள்ளார்.
 நேற்று மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளின் போது யாருடைய சடலமும் மீட்கப்படவில்லை.
மீட்பு பணிகளுக்காக காவற்துறையினரும், அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையமும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் இதுவரையில் 245 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
11 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
8 பேர் இன்னும் காணாமல் போய் இருப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் முழுமையான பொறுப்பையும் அரசாங்கம் ஏற்று, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதியும், பிரதமரும் அறிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் ஜனாதிபதி தலைமை தாங்கினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, சட்டவிரோத வசிப்பாளர்கள் தொடர்பில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ள வேண்டி இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு வேலைத்திட்டத்தை இன்றுமுதல் ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி, உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இதேவளை பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மே, ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் அவர்களுக்கான வீடுகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.