ஜனாதிபதியால் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட வன பாதுகாப்பு பிரகடன வர்த்தமானியை இரத்துச் செய்யக்கோரி கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமான முசலி மக்களின் சத்தியாக்கிரகப்போராட்டம் 17 ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.
மறிச்சுக்கட்டி தக்கியா பள்ளிவாசலுக்கு முன்னால் முசலி பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் தமது கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவி சாய்க்கும்வரை சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
மறிச்சுக்கட்டி, பாலக்குழி, கரடிக்குழி மற்றும் ஹுனைஸ் நகர், கொண்டச்சி, அகத்தி முறிப்பு, வேப்பங்குளம், பொற்கேணி ஆகிய கிராம மக்கள் இப்போராட்டத்தில் பங்கு கொண்டுள்ளனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அப்பகுதிக்கு சென்று அம்மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவியும் முசலி மக்களின் போராட்டத்தில் கலந்துகொண்டார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியும் அங்கு சென்றிருந்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆகியோரும் நேற்றுமுன்தினம் மறிச்சிக்கட்டிக்கு சென்று மக்களின் போராட்டத்தில் கலந்துகொண்டதோடு அவர்களின் போராட்டத்தை வலுவூட்டுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர்.
இதேவேளை, நேற்றுமுன்தினம் ஐக்கிய தேசியக்கட்சி மேல் மாகாண சபை மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் முசலி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்க அங்கு சென்றிருந்தனர்.
மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஜே.ஜெய்னுலாப்தீன் (லாபிர் ஹாஜியார்), ஹிதாயத் சத்தார் மற்றும் மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் இப்றாஹிம் ஆகியோரும் மேல் மாகாண சபை உறுப்பினர்களான இப்திகார் ஜெமீல் மற்றும் எம்.எஸ்.எம்.பைரூஸ் ஆகியோரும் அங்கு சென்று மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அத்துடன் மறிச்சிக்கட்டியில் கைவிடப்பட்ட பழைய கட்டடங்கள் மற்றும் தற்போது அமைக்கப்பட்டிருக்கும் புதிய வீடுகள் என்பவற்றையும் பார்வையிட்டனர்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையின பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று சித்திரை புதுவருடத்தை தொடர்ந்து அங்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க அரசாங்கத்தின் வனத்துறைக்கு பொறுப்பான அமைச்சர்களும் மீள்குடியேற்றத்துக்கு பொறுப்பான அமைச்சரும் இவ்விடயத்தில் தொடர்ந்தும் கரிசனையின்றி அம்மக்களை புறக்கணித்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அத்துடன் ஜனாதிபதி வர்த்தமானியில் கையொப்பமிட்டதுபோல் எமது போராட்டத்தை முடித்து வைக்க இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு தமக்கு நியாயம் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அத்துடன் நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்

