வடக்கில் காணப்படும் கிராம சேவகர் வெற்றிடத்தை நீக்க நடவடிக்கை – சாள்ஸ் எம் பி

250 0
வடக்கில் காணப்படும் 246 கிராம சேவகர் வெற்றிடங்களையும்  நிரப்பும் நோக்கில் ஏப்ரல் 28ம் திகதி நேர்முகத் தேர்விற்கான கடிதங்கள்  அனுப்பப்பட்டு மே மாதம் நேர்முகத் தேர்வுகள் இடம்பெறவுள்ளதாக உள் நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் நேற்றைய தினம் உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,
வடக்கின் 5 மாவட்டத்தின் 917 கிராம சேவகர் பிரிவிற்கும் 671  கிராம உத்தியோகத்தர்கள் மட்டுமே  பணியாற்றும் நிலையில் 246 கிராம சேவகர்களிற்கான வெற்றிடம் காணப்படுகின்றது. இவ்வாறு வெற்றிடமாகவுள்ள இடங்களிற்கான வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் கடந்த ஆண்டில் விண்ணப்பம் கோரப்பட்டு போட்டிப் பரீட்சைகளும் இடம்பெற்ற நிலையில் நியமனம் மட்டும் வழங்கப்படவில்லை. இதனால் குறித்த பிரதேச   கிராம சேவகர்கள் பிரிவுகளில் தொடர்ந்தும் நெருக்கடி நிலமையே காணப்படுகின்றது.
எனவே குறித்த  246 கிராமசேவையாளர் வெற்றிடங்களையும் நிரப்ப அமைச்சு உடன் ஆவண செய்ய வேண்டும் என நேற்றைய தினம் அமைச்சின் செயலாளர் லலித்திடம் நேரில் சென்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதன் போதே செயலாளர் மேற்படி உறுதி மொழியினை வழங்கியிருந்தார். அதன்பிரகாரம்  வடக்கின் 5 மாவட்டங்களிலும் உள்ள மாவட்டச் செயலகங்களின் தகவல்களின் பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்தினில் மொத்தமாக 435 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளபோதிலும் தற்போது 333 கிராம சேவகர்களே பணிபுரிவதனால் யாழ்ப்பாணத்தில் 102 கிராம சேவகர்களிற்கான வெற்றிடங்கள் நிலவுகின்றது. அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில்  136 கிராம சேவகர் பிரிவுகள் உள்ள நிலையில் 85 கிராம சேவகர்கள் மட்டுமே பணியாற்றும் நிலையில் இங்கு 51 கிராம சேவகர்களிற்கான  வெற்றிடம் நிலவுகின்றது.
இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள  95 கிராம சேவகர் பிரிவிகளில் 75 கிராம சேவகர்கள் பணியாற்றும் நிலையில்  20 கிராம சேவகர்களிற்கான  வெற்றிடம் காணப்படுகின்றது. அவ்வாறே வவுனியா மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 102 கிராம  சேவகர் பிரிவுகளில் 62 கிராம சேவகர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். இதனால் இங்கும்  40 கிராம சேவகர்களிற்கான பணி வெற்றிடமாகவே காணப்படுகின்றதோடு மன்னார் மாவட்டத்தின் 153 கிராம சேவகர் பிரிவுகளிலும் 123 கிராம சேவகர்கள் பணியாற்றுகின்றனர். இதனால் இங்கு  32 கிராம சேவகர்கள் பணி வெற்றிடம் கானப்படுவதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்கான தரவுகளும் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட செயலாளர் மாவட்டங்கள் தோறும் நிலவும் வெற்றிடத்திற்கேற்ப உடனடியாக இந்த மாதம் 28ம் திகதி நேர்முகத் தேர்விற்கான கடிதங்கள. அனுப்பப்பட்டு மே மாதம் நேர்முகத் தேர்வுகள் இடம்பெறுவதற்கான ஏற்காடுகள் இடம்பெறுகின்றன. எனவே அதன் பிரகாரம் குறித்த நியமனங்கள் விரைவில் வழங்கப்பட்டு அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என உறுதியளித்தார். என்றார்.