நவாஸ் ஷெரீப்புடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி சந்திப்பு

234 0

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அந்நாட்டு ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வா நேற்று இஸ்லாமாபாத்தில் சந்தித்தார்.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தானுக்கு கடத்தி செல்லப்பட்டார். அங்கு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
அதற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வா ஒப்புதல் அளித்தார்.

பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆனால், எந்த அச்சுறுத்தலுக்கும் பதிலடி கொடுக்க தங்கள் நாட்டு ராணுவம் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறினார். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அந்நாட்டு ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வா நேற்று இஸ்லாமாபாத்தில் சந்தித்தார். தற்போதைய பிரச்சினைக்கு பிறகு, இருவரும் சந்திப்பது இதுவே முதல்முறை ஆகும்.அப்போது, பாகிஸ்தான் ராணுவத்தின் தயார் நிலை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம், எல்லையில் நிலவும் சூழ்நிலை ஆகியவை பற்றியும் விவாதித்தனர்.

பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க ‘ரத்-உல்-பசாத்’ என்ற பெயரில் ராணுவ வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அதன் முன்னேற்றம் பற்றியும் நவாஸ் ஷெரீப்பிடம் ராணுவ தளபதி விளக்கி கூறினார்.இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், அவர்களின் ஆலோசனை பெரும் பர பரப்பை உண்டாக்கி உள்ளது