பறவை மோதியதால் டெல்லி சென்ற விமானம் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கம்

246 0

ஜெட் ஏர்வேஸ்-க்கு சொந்தமான விமானம் பறவை மோதியதால் ஏற்பட்ட பழுதால் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டெல்லி சென்ற ஜெட் ஏர்வேஸ்-க்கு சொந்தமான விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

நேற்று மாலை கஜுராஹோவில் இருந்து 138 பயணிகளுடன் டெல்லிக்கு சென்று கொண்டிருந்த, போயிங் 737-800 ரக விமானத்தின் மீது பறவை மோதியதையடுத்து, அந்த விமானம் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பழுது இன்னும் சரிசெய்யப்படாததால் மீண்டும் விமானம் டெல்லிக்கு புறப்படவில்லை என்று விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பறவை மோதியதால் விமானத்தின் ஒரு எஞ்சினில் உள்ள 3 பிளேடுகளுக்கு பலத்த சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஏற்பட்ட பலத்த சேதத்தாலேயே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

பழுதான பாகங்களை சரிசெய்ய, டெல்லியில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். பழுது சரி செய்யப்பட்ட பின்னர், நாளை விமானம் புறப்பட்டுச் செல்லும் என்றும் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் தனியாக பயணம் செய்தவர்களில் சிலர், நேற்று புறப்பட்ட டெல்லி விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், மற்ற பயணிகள் வாரணாசியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இன்று டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.