வாகன விபத்துகள் தொடர்பான ஆவணங்களை இணையதளம் மூலம் பெறலாம்: தமிழக அரசு

308 0

இழப்பீடு தொகை எளிதாக கிடைக்க, வாகன விபத்து தொடர்பான ஆவணங்களை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இழப்பீடு தொகை எளிதாக கிடைக்க, வாகன விபத்து தொடர்பான ஆவணங்களை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சாலை வாகன விபத்து இழப்பீடு உரிமை கோரிக்கை தீர்ப்பாயத்தில் விரிவான விபத்து அறிக்கைகளை அளிக்க வேண்டும் என்றும், காப்பீடு நிறுவனங்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இந்த விரிவான விபத்து அறிக்கைகளை காவல்துறை வழங்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு கடந்த 5.1.2017-ந் தேதி உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், மாநில குற்ற ஆவண காப்பகம் (https://tnp-o-l-i-ce.gov.in) என்ற காவல் இணையதளத்தின் வழியாக ஆவணங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த இணைய வசதி கடந்த 29.3.2017-ந் தேதி முதல், அனைத்து மாவட்ட வாகன விபத்து இழப்பீடு உரிமை தீர்ப்பாயங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், ஐகோர்ட்டு அறிவுரையின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீதிபதிகள் மற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்கள் மூலம் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 9-ந் தேதி சென்னை மற்றும் புதுச்சேரி நீதிபதிகள் மற்றும் அலுவலர்களுக்கு சென்னையில் உள்ள சட்டபயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழக அரசு காப்பீடு நிறுவனங்களுக்கு ஆவணங்களை இணையதளம் மூலமாக பகிர்ந்து கொள்ள ஒப்புதல் அளித்து கடந்த 11-ந்தேதி ஆணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் காப்பீடு நிறுவனங்கள் ஒரு ஆவணத்திற்கு ரூ.100 செலுத்தி ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது அனைத்து மாவட்ட போலீஸ் நிலையங்களிலும் அமல்படுத்தப்பட்டு 1.3.2017-ந் தேதி முதல் பதிவு செய்யப்பட்டுள்ள சாலை விபத்து வழக்குகள் தொடர்பான ஆவணங்களை பதிவிறக்கம் செய்து வருகிறார்கள்.

இதன் மூலம் 1.3.2017-க்கு பிறகு பதிவு மற்றும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் கீழ்க்கண்ட ஆவணங்களை காவல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது.

1. எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை), 2.ஆர்.சி. புத்தகம் (வாகன பதிவு புத்தகம்), 3. ஓட்டுனர் உரிமம், 4.காப்பீடு சான்றிதழ், 5.வாகனத்தின் தகுதிசான்றிதழ், 6.மாதிரி வரைபடம், 7.பார்வை மகஜர், 8. மோட்டார் வாகனஆய்வு அறிக்கை, 9.பிரேத பரிசோதனை அறிக்கை, 10. விபத்து பதிவு நகல், 11.காயச்சான்றிதழ், 12.இறுதி அறிக்கை மற்றும், 13. விரிவான விபத்து அறிக்கை தொடர்பான ஆவணங்கள்.

இந்த இணையதள வசதியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு தொகையை எளிதாக பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.