சர்வதேச நாடுகளால் மேற்கொள்ளப் படும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், இந்து சமுத்திரத்தின் நுழைவாயிலாக இலங்கையை மாற்றுவதே, தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோள்” என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “இந்து மற்றும் பசுபிக் சமுத்திரங்களை இணைக்கும் மூலோபாயத்தின் ஊடாக, ஜப்பானின் முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கூறினார்.
“அத்துடன், கொழும்புத் துறைமுகத்தின் வடக்குப் பிரிவை, 8 முதல் 10 மைல்கள் வரை (ஜா-எல பிரதேசம் வரை) நீடித்து, இந்து சமுத்திரத்தில் காணப்படும் பாரிய துறைமுகமாக, கொழும்புத் துறைமுகத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன” என்றும், பிரதமர், குறிப்பிட்டார்.
ஜப்பானுக்கான மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டிலுள்ள, ‘ஜப்பான் வெளிநாட்டலுவல்கள் வர்த்தக அமைப்பு’இனால் நேற்று (11) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருளாதாரக் கருத்தரங்கில் கலந்துகொண்டார்.
டோக்கியோவிலுள்ள குறித்த அமைப்பின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் கூறியதாவது, இதேவேளை, “ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பு தொடர்பில், இலங்கையில் முதலிடுவதற்கு முன்வர எண்ணிய சர்வதேச நாடுகளுக்குப் பிரச்சினை எழுந்துள்ளது. சீனாவுக்கு வழங்கப்பட மாட்டாது.
அதன் பாதுகாப்பு மற்றும் இதர நடவடிக்கைகளை, இலங்கைக் கடற்படையினரே மேற்கொள்வர். இது, இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்திலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.
“தெற்காசியா மற்றும் வங்காள விரிகுடா வலயங்களுக்குட்பட்ட நாடுகளின் மக்கள் தொகை, இன்னும் 20 வருடங்களில் 250 மில்லியன் வரை அதிகரிக்கும். அந்த மக்கள் தொகையை இலக்கு வைத்து, எதிர்கால முதலீடுகள் மற்றும் உற்பத்திகளைத் திட்டமிட வேண்டியது, ஜப்பான் அரசாங்கத்தினுடையது மாத்திரமன்றி இந்நாட்டு தனியார் துறையினரதும் பொறுப்பாகும்.
எதிர்காலத்தில், உலகின் மிக முக்கியமான வலயமாக, இந்து சமுத்திரம் விளங்கும். உலக வர்த்தகத்தில், இந்து சமுத்திரத்தின் தேவை மிக முக்கியமானதாகும். அதனை மையப்படுத்தி, இலங்கையை, இந்து சமுத்திரத்தின் நுழைவாயிலாக மாற்றுவதே, தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலக நாடுகளில், மத்தியதர வகுப்பைச் சேர்ந்தவர்களே, பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவ்வாறான நிலைமையிலிருந்து இலங்கை விலகிக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். பாதுகாப்பு விடயத்தில், நமது நாடு முன்னிலை வகிக்கிறது.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருகின்ற பாதுகாப்புத் தரப்பினருக்கு நாம் மதிப்பளிக்கிறோம். இலங்கையில், 30 வருங்களாக யுத்தம் நிலவியது. அதிலிருந்து மீண்டும், எமது நாடு தற்போது பாதுகாப்பு பெற்றுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை ஜப்பானுக்கே ஒப்படைத்துள்ளோம். கூடிய விரைவில், திருகோணமலை துறைமுகம், உலக நாடுகளுக்கு மிக முக்கியமான துறைமுகமாக விளங்கும்” என்று, பிரதமர் மேலும் கூறினார்.

