வருமான வரி விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 3 நாட்கள் விலக்கு

261 0

வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 3 நாட்கள் விலக்கு அளித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு மிகப்பெரிய அளவில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அ.இ.அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கமாக செயல்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கீதா லட்சுமி வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

விஜயபாஸ்கர் வீடு மற்றும் எம்.எல்.ஏ. விடுதி அறையில் இருந்து சுமார் ரூ.6 கோடி பணம், முக்கிய ஆவணங்களும் சிக்கின. ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு கோடிக் கணக்கில் பணம் வழங்கப்பட்டதற்கான ஆதாரமும் சிக்கியது.

இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், டாக்டர் கீதாலட்சுமி ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி வருமான வரித்துறை புலனாய்வு பிரிவில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், டாக்டர் கீதா லட்சுமி ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

சோதனையின்போது சிக்கிய ஆவணங்கள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டியிருப்பதால் தொடர்ந்து ஆஜராகும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து 3 நாட்களுக்கு விலக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள், விசரணைக்கு ஆஜராவதில் இருந்து அவருக்கு 3 நாட்கள் விலக்கு அளித்தனர். மூன்று நாட்களுக்குப் பிறகு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

அதேசமயம், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பல்வேறு கேள்விகளுக்கு பதில் தராமல் இருப்பதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.