தோல்வியை மறைக்கவே வாக்காளர் பெயர்களை நீக்கியதாக பாஜக கூறுகிறது: துரை வைகோ குற்றச்சாட்டு

27 0

  தோல்வியை மறைக்கவே வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டதாக பாஜக கூறுகிறது என மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த மக்களவைத் தேர்தல் மதவாத, பாசிச அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனமிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். மதிமுக தொண்டர்களைப் போலவே கூட்டணி கட்சியினர் களத்தில் பணியாற்றினர். திருச்சியில் போட்டியிட வாய்ப்பளித்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக அரசின் சாதனைகளை குறிப்பிடும்போது மிகுந்த வரவேற்பு கிடைத்தது. மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து, காலை உணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். அவர்கள் தேர்தலில் சிறப்பாக பணியாற்றவில்லை. இதை மறைக்கவே வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது போன்ற பதில்களை இப்போதே தயார் செய்து வைத்துள்ளனர். இந்தத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வெற்றிபெறும். இதுவே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளுக்கான பரிசாக இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.