தமிழகத்தில் இண்டியா கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஒருங்கிணைத்தார்: செல்வப்பெருந்தகை

16 0

தமிழகத்தில் ‘இண்டியா’ கூட்டணியை ஒருங்கிணைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மக்களவைத் தேர்தலின் முதல்கட்டம் தமிழகத்தில்அமைதியாக 70 சதவீத வாக்குப்பதிவுடன் நடந்து முடிந்திருக்கிறது. ஜனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையே நடைபெற்றதேர்தலில் தமிழக மக்கள் பெருவாரியாக ‘இண்டியா’ கூட்டணியை ஆதரிக்கும் வகையில் வாக்களித்திருக்கிறார்கள் என்ற உறுதியான செய்தி மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து செயல்பட்ட பெருமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. தமிழகத்தின் உரிமைகளையும், நலன்களையும் கடந்த 10 ஆண்டுகளாக பறித்துவந்த பாஜக ஆட்சிக்கு உரிய பாடத்தை புகட்டும் வகையில் முதல்வர் மேற்கொண்ட கடுமையான பரப்புரையால் ‘நாற்பதும் நமதே, நாளை நமதே, நாடும் நமதே’ என்னும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

40 தொகுதிகளிலும் அவரே வேட்பாளராக நிற்பதாகக் கருதி, வெற்றி வாய்ப்புக்கான அனைத்து முயற்சிகளையும் கூட்டணி கட்சித் தலைவர்களோடு பகிர்ந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சிக்கும், பாராட்டுக்கும் உரியது.

அதேபோல காங்கிரஸ் மூத்ததலைவர் ராகுல்காந்தி பரப்புரையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இருவரும் ஆற்றிய உரைகள் தமிழக மக்களிடையே பெரும் மாற்றத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் தமிழக பரப்புரையும் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.

அந்தவகையில், கூட்டணி கட்சிகளிடையே நல்லிணக்கத்தையும், ஆரோக்கியமான செயல்பாடுகளையும் உருவாக்கி, வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவதில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக ‘இண்டியா’ கூட்டணியின் தமிழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், வாக்குசேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்ட தொண்டர்களுக்கும் நன்றி, வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.