யாழ். குடாநாட்டின் மணல் விநியோகத்தின் தாமதத்தை நிவர்த்தி செய்யும் வகையில் உடனடியாக மாற்று இடத்தில் மணல் அகழ்விற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.யாழ். குடாநாட்டில் இடம்பெற்று வந்த மணல் விநியோகம் தடைப் பட்டுள்ளமை தொடர்பில் அரச அதிபரைத் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இது தொடர்பில் அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கான விநியோகத்திற்காக இதுவரை காலமும் மணல் பெறப்படும் பிரதேசமான ஜே 423, 424 , 425 கிராம சேவகர் பிரிவுகளின் கீழ் வரும் பகுதிகள் தமக்குரியது என வனஜீவராசிகள் திணைக்களம் உரிமை கோருவதோடு அப்பகுதியில் மணல் அகழ வேண்டாம் எனவும் தடை விதிக்கின்றனர்.இதன் காரணமாக தற்போது குடாநாட்டில் மணல் விநியோகம் தடைப்பட்டது. அவ்வாறு மணல் விநியோகம் தடைப்படும் இடத்தில் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் பாதிப்படையும். இதன் காரணமாக உடனடியாக மாற்றுப் பிரதேசத்தில் அந்த மண் அகழ்வை மேற்கொள்ளுமாறு ஆலோசணை வழங்கப்பட்டுள்ளது.
இதே நேரம் தமக்குரியது என வனஜீவராசித் திணைக்களத்தினர் உருமைகோரி தடைசெய்யும் பகுதி தொடர்பில் நாம் ஆரம்பத்திலேயே குறித்த அமைச்சுடன் உரையாடி மணல் அகழ்விற்காக அந்த இடத்தினை விடுவிக்குமாறு கோரியிருந்தோம். அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்த்து . இருப்பினும் தற்போது மீண்டும் உரிமை கோரியுள்ளனர். எனவே அப்பகுதியினை நிரந்தரமாக பெறுவதற்கான முயற்சிகளும் இடம்பெறுகின்றது.
இவ்வாறு இப்பகுதிகளை குடாநாட்டின் மணல் தேவைக்காக பெறும் நோக்கில் நேற்றைய தினம் வனஜீவராசிகள் அமைச்சினால் இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சின் செயலாளர் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மருதங்கேணிப் பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் அடிப்படையில் குறித்த பகுதியினை வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றது. என்றார்.

